பக்காத்தான் ராக்யாட் உறுப்புக் கட்சிகள் அடுத்து வரும் தேர்தலில் தங்களது சின்னங்களின் கீழ் போட்டியிட எண்ணம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்காத்தான் ராக்யாட் கூட்டணிக்கு நாளை சங்கப் பதிவதிகாரி அதிகாரத்துவ அங்கீகாரத்தை அளித்தாலும் அந்த நடைமுறையே பின்பற்றப்படும் என பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா கூறினார்.
கூட்டுச் சின்னத்தின் கீழ் பக்காத்தான் போட்டியிடுவதற்கு இறுதி நேர அங்கீகாரம் அனுமதித்தாலும் குறுகிய காலத்துக்குள் வாக்காளர்கள் பக்காத்தான் சின்னத்தை அடையாளம் தெரிந்து கொள்ள முடியாமல் போகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அந்த நிலை குழப்பத்துக்கு வழி வகுத்து விடக் கூடும் என அவர் சொன்னார்.
முறையான அரசியல் கூட்டணியை அமைப்பதற்கு குறைந்த பட்சம் ஆறு கட்சிகள் தேவைப்படும் என்ற காரணத்தினால் பக்காத்தான் தனது கூட்டணியை முறையாக அங்கீகரிக்கப்படுவதற்கு சங்கப் பதிவதிகாரியிடம் முயற்சி செய்யவில்லை. பக்காத்தானில் பிகேஆர், டிஏபி, பாஸ் ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே இணைந்துள்ளன.
அத்தகைய விதி முறை ஏதுமில்லை என பின்னர் தெளிவுபடுத்திய சங்கப் பதிவதிகாரி பக்காத்தான் முறையான விண்ணப்பத்தைச் சமர்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
ஆனால் பக்காத்தான் கூட்டணிக்கு பொது கொள்கை வடிவமைப்பை உருவாக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்த ஜைட் இப்ராஹிம் பிகேஆர்-லிருந்து விலகிய பின்னர் அந்த விண்ணப்பம் அப்படியே தொங்கிக் கொண்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து புதிய விண்ணப்பத்தை பக்காத்தான் இன்னும் சமர்பிக்கவில்லை என்று சங்கப் பதிவதிகாரி கூறினார்.
ஆனால் தாங்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் அதனை சங்கப் பதிவதிகாரி நிராகரித்து விட்டதாகவும் பக்காத்தான் தலைவர்கள் வலியுறுத்தினர்.
அந்தக் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக்குவதற்கு பக்காத்தான் ராக்யாட் எண்ணுவதாகவும் அந்த விவகாரத்தைத் தொடருவதாகவும் பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் கூறினார்.