சபாவில் இரண்டு பிஎன் தலைவர்கள் இன்று கட்சி மாறுவார்களா ?

உப்கோ எனப்படும் United Pasokmomogun Kadazandusun Murut Organisation அமைப்பின் துணைத் தலைவர் வில்பிரெட் பூம்புரிங்-கும் சபா அம்னோ தலைவர் லாஜிம் உக்கினும் எதிர்த்தரப்புக்குத் தாவக் கூடும் என்ற வதந்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

அவர்கள் இன்று அந்த மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டு பிகேஆர் நிகழ்வுகளில் கலந்து கொள்வர் எனப் பரவலாகப் பேசப்படுகின்றது.

அந்த இரண்டு பிஎன் தலைவர்களும் கோத்தா பெலுட்டில் பிற்பகலில் நிகழும் கமத்தான் திருவிழாக் கொண்டாட்டங்களிலும் கோத்தா கினாபாலுவில் இரவு மணி 8.30க்கு நிகழும் பிகேஆர் விருந்திலும் கலந்து கொள்ளும் சாத்தியம் உள்ளதாக சபா பிகேஆர் தலைவர் அகமட் தாம்ரின் ஜைனி கூறினார்.

அந்த இரு நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதற்காக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று பிற்பகல் மணி 1.40க்கு சபா சென்றடைந்தார்.

என்றாலும் கோத்தா பெலுட்டிற்குச் செல்லும் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் கமத்தான் நிகழ்வு பாதிக்கப்படலாம் என தாம்ரின் சொன்னார். விருந்து நிகழ்வு கோத்தா கினாபாலுவில் பிரபலமான மாநாட்டு மய்யம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“சபா முன்னேற்றக் கட்சித் தலைவர் யோங் தெக் லீ நிச்சயம் அந்த விருந்துக்கு வருவார். லாஜிமும் பூம்புரிங்-கும் கலந்து கொள்ளும் வாய்ப்புக்களும் நிறைய உள்ளன.”

“ஆனால் அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை நாங்கள் உறுதி செய்ய முடியாது,” என தொலைபேசி வழி அளித்த பேட்டியில் தாம்ரின் சொன்னார்.

இன்றிரவு அன்வாருடன் ஒரே மேடையில் நிற்பதற்கு லாஜிமும் பூம்புரிங்-கும் முடிவு செய்தால் எதிர்க்கட்சிகளுக்கு அது பெரிய புரட்சியாக அமையும்.

இதனிடையே போக்குவரத்துத் துணை அமைச்சரான லாஜிம் சபாவில் இருப்பதை உறுதி செய்த அவரது தனிப்பட்ட செயலாளர், அவர் சபாவில் எங்கு இருக்கிறார் என்பதைத் தெரிவிக்கவில்லை. நாளை கூடும் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக லாஜிம் கோலாலம்பூர் திரும்புவார் என்றும் மட்டும் கூறினார்.

தியான் சுவா: இன்னும் தயாராக இல்லை

இதனிடையே அந்த வதந்திகளை பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா நிராகரித்துள்ளார். கட்சி மாறுவது எதுவும் இருந்தால் அது இன்று நிகழும் எனத் தாம் எதிர்பார்க்கவில்லை என்றார் அவர்.

செராமாவிலும் கட்சி நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதே அன்வாருடைய சபா பயண நோக்கம் என அவர் மேலும் சொன்னார்.

சபா பிஎன் தலைவர்களுடன் விவாதங்கள் தொடருவதை ஒப்புக் கொண்ட அவர், அவர்கள் பிகேஆர்-ல் இணைவதற்குப் பதில் ‘பக்காத்தான் நட்புறவு’ உறுப்பினர்கள் என்ற நிலையைத் தேர்வு செய்யலாம் என்றார்.

“அவர்கள் ஒரு கட்சியாக பிஎன்-னிலிருந்து வெளியேறுவார்களா அல்லது தனிநபர்களாக இணைவார்களா என்பது அவர்களைப் பொறுத்ததாகும்,” என தியான்  குறிப்பிட்டார்.

சபா பிஎன் உடைவதை ‘தடுக்க முடியாது’ என அவர் வருணித்தார். சபா பிஎன்-னில் மேல் நிலையும் கீழ் நிலையும் நிலை குலைந்து சரிந்து வருவதாகவும் அவர் கூறிக் கொண்டார்.

 

TAGS: