பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கு எதிராக பினாங்கு அம்னோ தலைவர் சைனல் அபிடின் ஒஸ்மான் தொடுத்திருந்த ரிம30மில்லியன் அவதூறு வழக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இன்று காலை நீதிபதி அமிலியா டி ஹொங் கியோக் அப்துல்லா, தமது அறையில் வழக்கைத் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்தார்.
லிம்மின் வழக்குரைஞர் ஜர்தீப் சிங், வழக்குத் தொடுக்கும் உரிமை சைனலுக்குக் கிடையாது என்று எதிர்த்தரப்புத் தலைமை வழக்குரைஞர் முன்வைத்த வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டார் என்று தெரிவித்தார்.
சைனல் அபிடின்(இடம்),52,கொம்டாரிலும் பினாங்கு பாலத்திலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கும் டிஏபி மாநிலத் தலைமையகத்துக்குத் தீ வைக்க முயன்ற சம்பவத்துக்கும் அம்னோவுக்கும் தொடர்புண்டு என்று கூறினார்கள் எனக் குற்றம்சாட்டி கடந்த அக்டோபர் 24-இல் நால்வருக்கு எதிராக வழக்கைப் பதிவு செய்தார்.
அவர், பிகேஆர்,அக்கட்சி செய்தித்தாளான கெஅடிலான் டெய்லியை வெளியிடும் செக்மென் பிலெக்சிபல் சென்.பெர்ஹாட், அதன் தலைமைச் செய்தி ஆசிரியர் பாஸல்லா பிட் ஆகியோரையும் எதிர்வாதிகளாகக் குறிப்பிட்டிருந்தார்.