நேற்று அலோர் ஸ்டாரில், நாடற்றவர்களுக்கு அவர்களைக் குடிமக்களாக அங்கீகரிக்கும் சட்டப்பூர்வ ஆவணங்களைப் பெற்றுத்தர பிகேஆர் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்கவில்லை.
பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன், மத்திய தலைமை மன்ற உறுப்பினர் லத்திபா கோயா, கோலா கெடா எம்பி அஹமட் காசிம் முதலியோர் மைகார்ட் வைத்துள்ள 100பேரை அழைத்துக்கொண்டு கெடா தலைநகரில் உள்ள பதிவுத் துறைக்குச் சென்றார்கள்.
பதிவுத்துறையில் திரண்ட கூட்டத்தை 30போலீசாரும் ரேலா உறுப்பினர்களும் அணுக்கமாகக் கண்காணித்தனர்.
கூட்டத்தை அழைத்துச் சென்ற பிகேஆர் அதிகாரிகளைப் பதிவுத்துறை இயக்குனர் முகம்மட் பவுசி அப்துல்லா சந்தித்துப் பேசினார்.ஆனால், நாடற்றவர்களாக இருப்போரைக் குடிமக்களாக்கும் ஏற்பாடுகளைச் செய்வதாக உத்தரவாதம் அளிக்க அவர் தயாராக இல்லை.
“அவர் கூறியதிலிருந்து எங்களுக்குத் தெரியவருவது என்னவென்றால், இம்மக்களுக்குக் குடியுரிமை பெறும் தகுதி இருந்தாலும் இவர்களுக்கு நீலநிற மைகார்ட் வழங்கும் முடிவை உள்துறை அமைச்சர்தான் செய்ய முடியும்”, என்று சுரேந்திரன் கூறினார்.
தீவகற்ப மலேசியாவில் நாடற்றவர்களாக உள்ளவர்களில் பெரும்பகுதியினர் இந்தியர்கள் என்பதைத் தனியே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை.நேற்று கெடா பதிவுத்துறைக்குச் சென்ற கூட்டமே அதற்குச் சான்று.
பிகேஆர், தீவகற்ப மலேசியாவில் நாடற்றவர்களாக உள்ளவர்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்குக் குடியுரிமை பெற்றுத் தரும் இயக்கமொன்றை மேற்கொண்டுள்ளது. சுரேந்திரன் அதற்குத் தலைமையேற்று சளைக்காமல் பாடுபடுகிறார்..
நாடற்றவர்களாக உள்ளவர்களின் எண்ணிக்கை விசயத்தில் பிகேஆருக்கும் மஇகாவுக்குமிடையில் தொடர்ந்து சர்ச்சை நிலவுகிறது.நாடற்றவர்களின் எண்ணிக்கை 45ஆயிரத்தைத் தாண்டாது என்று மதிப்பிட்டுள்ளது மஇகா.ஆனால், மஇகாவின் மதிப்பீட்டைவிட அது நான்கு மடங்கு அதிகம் என்கிறது பிகேஆர்.
இதை வெறுப்பூட்டு நிலவரம் என்று வருணிக்கும் பிகேஆர் ஆலோசகர் அன்வார் இப்ராகிம், பக்காத்தான் ரக்யாட் ஆட்சிக்கு வந்தால் தீவகற்பத்திலும் சரவாக்கிலும் நாடற்றவர்களாக உள்ளவர்களுக்குக் குடியுரிமை வழங்க விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி கூறியுள்ளார்.