அடுத்த மாற்றம்: என்எப்சி நெடுங்கதை வெள்ளித் திரையில் என்கிறது பிகேஆர்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட ஊழல் மீது திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க பிகேஆர் திட்டமிட்டுள்ளதாக அந்தக் கட்சியின் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் அறிவித்துள்ளார்.

அந்தத் திரைபடம் அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில் மற்றும் அவரது குடும்பத்தினர் சம்பந்தப்பட்டதாக இருக்கும்.

ஷாரிஸாட்டின் கணவரும் பிள்ளைகளும் தலைமை நிர்வாகிகளாக இருந்த என்எப்சி, அரசாங்கம் குறைந்த வட்டியில் கொடுத்த 250 மில்லியன் ரிங்கிட் கடனைத் தவறாகப் பயன்படுத்தியதாக் கூறப்படும் ஊழல் விவகாரத்தில் சிக்கிக் கொண்டுள்ளது.

“பலர் எங்களை அழைத்து என்எப்சி விஷயம் மீது ஏன் அமைதியாகி விட்டனர் என விசாரித்துள்ளனர். நாங்கள் ஷாரிஸாட்டைக் கண்டு பயப்படுகின்றோமா ? கவலைப்பட வேண்டாம். நாங்கள் அதன் தொடர்பில் வேலை செய்து கொண்டிருக்கிறோம்.”

“ஷாரிஸாட் எப்போதும் சண்டை போடுவதற்கு விரும்புவதால் நான் அவருடன் தகராறு செய்து செய்து களைப்படைந்து விட்டேன். இனிமேலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.”

“ஆகவே நாங்கள் சிறப்புத் திரைப்படம் ஒன்றைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துகிறோம். அதில் ஷாரிஸாட், அவர் கணவர், பிள்ளைகள் ஆகியோரது பாத்திரங்களை நடிகர்கள் ஏற்பார்கள்,” என அவர் நேற்றிரவு  பந்தாய் டாலாமில் கம்போங் பாசிர் பாருவில் 500 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் தெரிவித்தார்.