தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரி நடத்தப்பட்ட பெர்சே 3.0 பேரணியின் போது பட/பத்திரிக்கையாளர் ஒருவரை அடித்ததாக கீழ் நிலையில் போலீஸ்காரர்கள் மீது மட்டும் குற்றம் சாட்டுகின்ற பெயரளவுக்கான நடவடிக்கை போதுமானது அல்ல என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.
அந்த நடவடிக்கை பேரணியின் போது போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட பிரச்னையையும் படை பலம் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுவதையும் உண்மையில் தீர்க்கவில்லை என்றார் அவர்.
“இரண்டு கான்ஸ்டபிள்கள் மீது மட்டும் குற்றம் சாட்டி விட்டு பொறுப்பேற்க வேண்டிய மேல் நிலையில் உள்ளவர்களை விட்டு விடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது,” என இன்று மக்களவையில் பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸிடம் எழுப்பிய துணைக் கேள்வியில் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 28ம் தேதி பேரணியின் போது போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக கூறப்படுவது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட விசாரணையின் ஒரு பகுதியாக இது வரை அந்த இரண்டு போலீஸ்காரர்கள் மீது மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நஸ்ரி அதற்கு முன்னர் தமது பதிலில் தெரிவித்தார்.
அமைதியாகத் தொடங்கிய அந்தப் பேரணியில் பல பங்கேற்பாளர்கள் போலீஸ் அமைத்திருந்த தடுப்புக்களை மீறியதாகக் கூறப்பட்ட பின்னர் போலீசார் 200,000க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதும் நிருபர்கள் மீதும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் இரசாயனம் கலந்த நீரையும் பாய்ச்சினர். அதனைத் தொடர்ந்து போலீசார் அளவுக்கு அதிகமாக படை பலத்தைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் போலீஸ்காரர்கள் உட்பட பலர் காயமடைந்தனர்