குவாந்தானில் சீன உயர்நிலைப்பள்ளிக்கு ஒப்புதல் கிடைக்கும் சாத்தியம் இன்னமும் உண்டு என்று வலியுறுத்திய மசீச துணைத் தலைவர் லியோங் தியோங் லாய், அவ்விவகாரத்துக்குத் தீர்வுகாண கட்சிக்கு சிறிது அவகாசம் தர வேண்டும் என்று சீனர் சமூகத்தைக் கேட்டுக்கொண்டார்.
சொங் ஹுவா சுயேச்சை உயர்நிலைப் பள்ளியின் கிளை ஒன்று குவாந்தானில் அமைய ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் தமக்குக் கிடையாது என்றும் அவ்விசயத்தில் தம் “கரங்கள் கட்டப்பட்டுக் கிடப்பதாகவும்” துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முகைதின் யாசின் தொடர்ந்து கூறிவந்துள்ள போதிலும் லியோ இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
“சிறிது அவகாசம் கொடுங்கள்.கட்சித் தலைவரும்(டாக்டர் சுவா சொய் லெக்)நானும் சேர்ந்து முயற்சி செய்து வருகிறோம்”, என்று அவர் தெரிவித்தார்.லியோ, இன்று கோலாலம்பூரில் தொற்றா-நோய்களை முறியடித்தல் மீதான உலக சுகாதார நிறுவனத்தின் வட்டார மாநாட்டைத் தொடக்கிவைத்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவ்விவகாரம் தொடர்பில் மேற்கொண்டு விவாதிக்குமாறு முகைதின் மசீசவிடம் கூறியிருப்பதாக லியோ மே 23-இல் சீனமொழி நாளேடுகளிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால், கடந்த வியாழக்கிழமை முகைதினிடம் அது பற்றி வினவியதற்கு அவ்விவகாரத்தில் முடிவுசெய்யும் அதிகாரம் தமக்கில்லை என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.