ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றம், போலீஸ் காவலில் இருந்தபோது இறந்துபோன ஏ.குகன் வழக்கில், குகனுக்குக் காயம் விளைவித்த போலீஸ்காரருக்கு மூன்றாண்டுச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
குற்றவாளி வி.நவீந்திரன் குற்றச்சாட்டை மறுத்ததுடன் சரி ஆதாரங்கள் எதையும் முன்வைக்கவில்லை என்று கூறிய நீதிபதி அஸ்லாம் சைனுடின், காயம் விளைவித்ததாகக் சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளிதான் என்று தீர்ப்பளித்தார்.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் முன்றாண்டுச் சிறைத் தண்டனை விதித்தாலும் இரண்டையும் ஏக காலத்தில் அனுபவிக்க அஸ்லாம் உத்தரவிட்டார்.
தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்திவைக்க விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவர், நவீந்திரனுக்கான பிணையை ரிம20,000ஆக உயர்த்தினார்.
குகனுக்குக் காயம் விளைவித்தார் எனக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 330-இன்கீழ் 2009,அக்டோபர் முதல் தேதி நவீந்திரனுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
குகன்,23, 2009, ஜனவரி 16, காலை ஏழு மணிக்கு யுஎஸ்ஜே-சுபாங் ஜெயாவில் உள்ள தைபான் போலீஸ் நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்டதன் காரணமாக உயிர் இழந்தார்.
கடந்த ஆண்டு ஜனவரி 28-இல்,நவீந்திரன் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.ஆனால், மேல்முறையீடு செய்யப்பட்டதில் எதிர்வாதம் செய்யுமாறு பணிக்கப்பட்டார்.
அவர் குகனுக்குப் படுகாயம் விளைவித்தார் என்றுதான் முதலில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.ஆனால், அதைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் காயம் விளைவித்ததாகக் கூறும் இரண்டு குற்றச்சாட்டுகளை மட்டும் ஏற்றுக்கொண்டது.
இவ்வாண்டு தொடக்கத்தில் குகனின் தாயார் இந்திரா நல்லதம்பி(வலம்),43,சம்பவம் நடந்தபோது சிலாங்கூர் போலீஸ் தலைவராக இருந்த காலிட் அபு பக்கார்(இப்போது துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ்), நவீந்திரன், அப்போதைய சுபாங் போலீஸ் தலைவர் சைனல் ரஷிட் அபு பக்கார் (இப்போது காலமாகிவிட்டார்), போலீஸ் படைத் தலைவர், அரசாங்கம் ஆகியோருக்கு எதிராக ரிம100மில்லியன் வழக்கு ஒன்றைப் பதிவு செய்தார்.
கார் திருடர் என்று சந்தேகிப்படும் குகன், தைப்பான் போலீஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது இறந்தார். செர்டாங் மருத்துவமனை பிணக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலைப் பெற பிணக்கிடங்கின் கதவுகளை உடைத்துக்கொண்டே உள்ளே சென்ற அவரது குடும்பத்தினர் அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதைக் கண்டனர்.
‘நுரையீரலில் நீர்தேங்கியதால் ஏற்பட்ட திடீர் மரணம்’ என செர்டாங் மருத்துவமனை வழங்கிய சவப் பரிசோதனை அறிக்கை குடும்பத்தாருக்கு திருப்தி அளிக்கவில்லை.
யுனிவர்சிடி மலாயா மருத்துவ மையத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சவப் பரிசோதனையில் அது கொலை என வகைப்படுத்தப்பட்டது.