லியாவ் இறுதியில் WWW15 எண் தகட்டை கை விட்டார்

WWW15 எண் தகடு மீது தொடர்ச்சியாக குறை கூறப்பட்ட பின்னர் சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய், அந்த கவர்ச்சியான எண்ணை கை விடுவதாக அறிவித்துள்ளார்.

தாம் அந்த எண் தகடுக்கு ஏலம் கேட்கவில்லை என்றும் தமது அதிகாரத்துவ காருக்கு அந்த எண்ணைக் கோரியதாக மசீச துணைத் தலைவருமான அவர் இன்று விடுத்த ஒரு பத்தி அறிக்கை தெரிவித்தது.

“நான் அந்த WWW15 டெண்டர் கொடுக்கவும் இல்லை. ஏலம் கேட்கவும் இல்லை என்பதை உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன். முறையான நடைமுறைகளைப் பின்பற்றிய பின்னர் என் அதிகாரிகள் அமைச்சருடைய அதிகாரத்துவக் காருக்கு அந்தப் பதிவு எண்ணைப் பயன்படுத்துவதற்கு வேண்டுகோள் மட்டுமே விடுத்தனர்,” என அந்த அறிக்கை கூறியது.

அந்த எண் இலவசப் பதிவுக்கு உரியது என்பதை உறுதி செய்யும் கடிதம் சாலைப் போக்குவரத்துத் துறையிடமிருந்து அதிகாரத்துவக் கடிதம் எனது அலுவலகத்துக்கு ஜுன் 6ம் தேதி கிடைத்தது. ”

“எனக்குத் தெரிந்த வரையில் அந்த எண்ணுக்கு பலர் ஏலம் கேட்டிருந்தனர். ஆகவே நான் என்னுடைய தேர்வை பயன்படுத்தாமல் இருப்பதே சரியான நடவடிக்கை ஆகும். அந்த எண் அதிக விலைக்கு ஏலம் கேட்டவருக்கு போக வேண்டும்,” என்றார் அவர்.

லியாவுக்கு உள்ள மூன்று தேர்வுகள் கொடுக்கப்பட்டன. தமது அமைச்சர் தகுதிக்கு இணங்க அந்த எண் தகட்டை இலவசமாக ஏற்றுக் கொள்வது அல்லது ஏல விலையான 24,200 ரிங்கிட்டை செலுத்தி அதனைப் பெற்றுக் கொள்வது, அந்த எண் தகட்டை நிராகரிப்பது ஆகியவையே அந்தத் தேர்வுகளாகும்.