ஸ்கார்ப்பியோன் புலனாய்வு கடுமையான விவகாரம் அல்ல என்கிறார் வெளியுறவு அமைச்சர்

இரண்டு ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கிகளை கொள்முதல் செய்ததில் ஊழல் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவது மீது பிரஞ்சு அரசு வழக்குரைஞர்கள் நடத்தும் புலனாய்வு அரசாங்கம் இப்போது கவனம் செலுத்த வேண்டிய அளவுக்குக் கடுமையான விஷயம் அல்ல என வெளியுறவு அமைச்சர் அனீபா அமான் கூறியிருக்கிறார்.

“நாம் தொடர்ந்து கவனிக்க வேண்டிய கடுமையான விஷயமல்ல அது. சில தரப்புக்கள் அதனைப் பெரிதுபடுத்தி வருகின்றன,” என அவர் சொன்னார்.

ஆசியான் நாடுகளின் பேராளர்களுடன் நண்பகல் விருந்தில் கலந்து கொண்ட பின்னர் அனீபா நிருபர்களிடம் பேசினார்.

பாரிஸில் இப்போது விசாரிக்கப்பட்டு வரும் அந்த விவகாரத்தை எதிர்நோக்குவதற்கு மலேசியா என்ன ஏற்பாடுகளை செய்துள்ளது என வினவப்பட்ட போது வெளியுறவு அமைச்சர் அவ்வாறு பதில் அளித்தார்.

தேவைப்படும் போது வழக்கு விசாரணையை எதிர்நோக்க அவசியமான ஏற்பாடுகளை மலேசியா செய்யும் என்றும் அவர் சொன்னார்.

“இது வரை எங்களுக்கு பிரஞ்சுத் தூதரகத்திடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. ஆனால் அவசியமானால் நாங்கள் எங்களைத் தற்காப்பதற்குத் தயாராக இருக்கிறோம்.”

இரண்டு நீர்மூழ்கிகள் கொள்முதலில் மலேசியத் தரப்புக்களுக்கு பிரஞ்சுத் தற்காப்புத் தளவாடத் தயாரிப்பு நிறுவனமான டிசிஎன்எஸ் கையூட்டுக்களைக் கொடுத்ததாக கூறப்படுவது மீது அந்த பிரஞ்சு நிறுவனத்தின் மீது உள்நாட்டு மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் வழக்குத் தொடர்ந்துள்ளது.