ஏஜி என்ற சட்டத் துறைத் தலைவர் அலுவலக ஆணைக்கு இணங்க பல பிரபலமான கிரிமினல் வழக்குகள் மறைக்கப்பட்டிருக்கலாம்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து போலீஸ் புலனாய்வுகளில் ஏஜி நிலை வலுப்படுத்தப்பட்டுள்ளதே அதற்குக் காரணம்.
அதனால் அவரது அலுவலகம் எந்த நேரத்திலும் ஒரு வழக்கு தொடர்பான புலனாய்வு பத்திரங்களை அது முடிக்கப்படாமல் இருந்தாலும் கோர முடியும்.
அதன் விளைவாக போலீஸ் விசாரணை எந்தக் கோணத்தில் நடைபெற வேண்டும் என்பதைக் கூட ஏஜி அலுவலகம் முடிவு செய்வதாகக் கூடத் தோன்றும். இத்தகைய நிலை போலீஸ் படையில் முன்பு எப்போதும் ஏற்பட்டதில்லை.
சர்ச்சைக்குரிய அந்த விஷயத்தை முன்னாள் கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் மாட் ஜைன் இப்ராஹிம் எழுப்பியுள்ளார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தங்களை நாடாளுமன்றம் 2006ம் ஆண்டு ஏற்றுக் கொண்டது. அவை 2007ம் ஆண்டு தொடக்கம் அமலில் இருக்கின்றன. அவை சுதந்தரமாக புலனாய்வு செய்வதற்கு தனக்கு இருந்த அதிகாரங்களில் சிலவற்றை போலீஸ் படை இழப்பதற்கு வழி வகுத்து விட்டது.
அதற்கு முன்னதாக ஏஜி அலுவலகம் போலீஸ் ஆகியவற்றின் கடமைகளை தெளிவாக வரையறுக்கும் வகையில் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டிருந்தன.
“புலனாய்வு, வழக்குத் தொடருவது சம்பந்தப்பட்ட அதிகாரங்களைப் பொறுத்த மட்டில் பல தசாப்தங்களுக்கு இரண்டு தரப்பும் அதிகாரப் பிரிப்பில் மனநிறைவு கொண்டிருந்தன.
திருத்தங்களுக்கு முன்னதாக எந்தப் பிரச்னையும் இல்லை. தொழில் நிபுணத்துவ, சுதந்திரமான அமைப்பு என்ற முறையில் போலீஸ் படையின் சவப் பெட்டியில் இன்னொரு ஆணியை அந்தத் திருத்தங்கள் அடித்து விட்டதாக மாட் ஜைன் வருத்தமுடன் கூறினார்.