ஏ குகன் போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்தது தொடர்பான புலனாய்வு மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என குகன் குடும்பத்தினர் இன்று கூறியுள்ளனர்.
அதில் ஒன்றுக்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என அந்தக் குடும்பத்தினர் கருதுவதே அதற்குக் காரணம்.
“அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து 11 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அந்த விவகாரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம்,” என குடும்ப வழக்குரைஞரான என் சுரேந்திரன் கூறினார்.
அவர் இன்று பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்களிடம் பேசினார்.
அவர் அப்போது குகன் குடும்பத்தினரின் நான்கு கோரிக்கைகளையும் வெளியிட்டார்.
குகனுடைய தாயார் என் இந்திரா சார்பில் பேசிய சுரேந்திரன், போலீஸ் கான்ஸ்டபிள் வி நவிந்தரனுக்கு லேசான மூன்று ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதைக் குறை கூறினார்.
நவிந்தரன் மீது குறைந்த பட்சம் கடுமையாக காயம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கூடின பட்ச தண்டனையாக பத்து ஆண்டுகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார் அவர்.
அந்த நிருபர்கள் சந்திப்பு முழுவதும் இந்திராவின் கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. ஊடகவியலாளர்களுடன் பேச முடியாத அளவுக்கு அவர் உணர்ச்சி வசப்பட்டிருந்தார்.