வேலையில்லாதோருக்கான உத்தேச காப்புறுதித் திட்டம் “ஒத்திவைக்கப்படவுமில்லை, தள்ளிவைக்கப்படவுமில்லை”, என்பதை வலியுறுத்துகிறார் மனிதவள அமைச்சர் எஸ்.சுப்ரமணியம்.
அது, நிறுவனங்கள் திடீரென்று இழுத்துமூடப்படும்போது அவற்றின் பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளில் ஒன்றுதான் என்று குறிப்பிட்ட சுப்ரமணியம், அதனால் எத்தரப்புக்கும் அனாவசிய சிரமம் ஏற்படாதபடி பார்த்துக்கொள்ளப்படும் என்றார்.
அரசாங்கம் குறைந்தபட்ச சம்பளத்தை நடைமுறைப்படுத்தும்வரை இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது பற்றிக் கருத்துரைத்தபோது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
“கடந்த ஈராண்டுகளாக பல தரப்புகளுடன் பேசி இருக்கிறோம்.பலரும் பல மாதிரி ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளனர்”.
இத்திட்டம் தொடர்பில் அமைச்சு, அனைத்துலக தொழிலாளர் நிறுவனத்தின் உதவியையும் நாடியிருப்பதாக சுப்ரமணியம் தெரிவித்தார்.
இத்திட்டத்தை அறிமுகப்படுத்த செப்டம்பருக்குள் ஒரு சட்டத்தை வரைவதில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாகக் கூறிய மலேசியன் இன்சைடர், சிறிய, நடுத்தரத் தொழில்துறை(எஸ்எம்இ),அதை நிராகரித்து விட்டதாகவும் கூறியது. அத்திட்டத்தால் ஏற்படும் 40விழுக்காட்டுச் செலவை ஏற்க முடியாது என்பதால் அத்துறை அதை நிராகரித்ததாம்.
“நிலவரத்தை அறிந்தே வைத்திருக்கிறோம்.முதலாளிகளுக்கு தேவையற்ற சிரமங்களைக் கொடுக்க விரும்பவில்லை.அதனால் இவ்விவகாரத்துக்கு ஒரு நல்ல தீர்வு காணப்படும்”, என்று சுப்ரமணியம் கூறினார்.
“எஸ்எம்இ அச்சம் கொள்வதிலும் நியாயம் இருக்கிறது.அதனால், அவர்களுக்கு மேலும் செலவை ஏற்படுத்தும் எதையும் செய்யும் முன்னர் அரசாங்கம் கவனமாக பரிசீலிக்கும்”.