டிஏபி தன் முகத்தில் தானே கரி பூசிக்கொண்டது

பினாங்கு மசீச, பினாங்கு துறைமுக ஆணையம்(பிபிசி)பற்றி விசயம் புரியாமலேயே பேசிக் கொண்டிருப்பதாக தன் எதிரியான டிஏபியைச் சாடியுள்ளது.

பிபிசிக்கும் பினாங்கு துறைமுகம் செண்டிரியான் பெர்ஹாட்(பிபிஎஸ்பி)டுக்குமிடையேயுள்ள வேறுபாட்டைக்கூட புரிந்துகொள்ளாமல் பினாங்கு துறைமுகம் பற்றிய விவகாரத்தை டிஏபி பெரிதுபடுத்தி வருவதாக மாநில மசீச மகளிர் தலைவி டான் செங் லியாங் சுட்டிக்காட்டினார்.

துறைமுகத் தனியார்மயம் வேறு; தீர்வையற்ற துறைமுகம் வேறு.“இரண்டும் வெவ்வேறானவை”.இந்த வேறுபாட்டைக்கூட டிஏபியால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாரவர்.

“பல விளக்கங்கள் கொடுத்தும்கூட அதை அவர்கள் புரிந்துகொள்ளாதிருப்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.தங்கள் தவற்றை ஒப்புக்கொள்ள மறுப்பதன்வழி தங்கள் முகத்தில் தாங்களே கரி பூசிக் கொள்கிறார்கள்.” டான், இன்று பினாங்கில் செய்தியாளர் கூட்டமொன்றில் இவ்வாறு கூறினார்.

டிஏபி தலைவர்கள் பினாங்கு துறைமுகத்தைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து சர்ச்சையிட்டு வருகிறார்கள்.

அது மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்கின் சதித் திட்டம் என்று கூறியுள்ள டிஏபி,அவர் பினாங்கு பொருளாதாரத்தைத் தனிமைப்படுத்தியும் அதன் துறைமுக வசதிகளைக் குறைத்தும் தம் சொந்த மாநிலமான ஜோகூருக்கு நன்மை செய்யப் பார்க்கிறார் என்று குறை கூறியுள்ளது. 

பிபிசி என்பது துறைமுகத்தின் நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்ள போக்குவரத்து அமைச்சின்கீழ் செயல்பட்டுவந்த ஓர் அமைப்பாகும் என்று அதன் முன்னாள் தலைவரான டான் விளக்கினார்.

பிபிஎஸ்பி என்பது நிதி அமைச்சின்கீழ் செயல்படுகிறது.அதன்கீழ் பினாங்கு துறைமுகம் ஒரு நிறுவனம் ஆக்கப்பட்டு அதைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. துறைமுகத்தின் செயல்திறனை மேம்படுத்தவும் அதன் போட்டியிடும் திறனை உயர்த்தவும் அவ்வாறு செய்யப்பட்டு வருகின்றன.

அது மத்திய அரசு “நல்லெண்ணத்துடன்” மேற்கொண்ட ஒரு நடவடிக்கை என்று குறிப்பிட்ட டான், டிஏபி அதை அரசியல் விவகாரமாக்கி அது “பினாங்கு மக்களைத் தண்டிக்கும் நடவடிக்கை” என்று கூறிவருவதாக குற்றம் சாட்டினார்.

“அது ஒரு தவறான குற்றச்சாட்டு.அத்திட்டம் பற்றி ஐயப்பாடுகள் இருக்குமேயானால் டிஏபி எம்பிகள்(லியு சின் தோங்கும் சொங் எங்கும்) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டும்.

“மக்கள் அவர்களைத் தேர்ந்தெடுத்து எம்பி சம்பளம் கொடுத்து வருவது எதற்காக?”, என்றவர் வினவினார்.

 

 

TAGS: