பல முஸ்லிம்கள் ஹஜ் யாத்ரை மேற்கொள்ளும் அக்டோபர் மாதத்தில் தேர்தல் நிகழாது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாக்குறுதி அளிக்க வேண்டும் என பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் கேட்டுக் கொண்டுள்ளார்.
“வாக்காளர்கள் என்ற முறையில் தங்களது உரிமை குறித்து ஹஜ் யாத்ரீகர்களிடையே உருவாகக் கூடிய கவலையைப் போக்குவதற்கு உத்தரவாதம் தேவைப்படுகிறது,” என அவர் விடுத்த அறிக்கை தெரிவித்தது.
30,000 முஸ்லிம்கள் உறுதியற்ற சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளனர். காரணம் அவர்களில் பலர் சாத்தியமான வேட்பாளர்கள், வேட்பாளர்களின் பேராளர்கள், தேர்தல் இயக்குநர்கள் என அவர் சொன்னார்.
“அத்தகைய உத்தரவாதம் இல்லாவிட்டால் அவர்கள் ஹஜ் பயணத்தைத் தொடருவதா அல்லது அதனை தள்ளி வைப்பதா என்ற இக்கட்டான சூழலில் சிக்கிக் கொள்வர்.”
“இதில் எல்லா அரசியல் கட்சிகளும் சம்பந்தப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் மீது வாக்களிப்போர் விகிதம் மீதும் விரிவான தாக்கத்தை அது ஏற்படுத்தக் கூடும்,” என்றார் துவான் இப்ராஹிம்.
பொதுத் தேர்தலில் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ள தனது உறுப்பினர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதைத் தள்ளி வைக்குமாறு அண்மையில் அந்த இஸ்லாமியக் கட்சி கேட்டுக் கொண்டதை பல தரப்புக்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.
அரசியல் கடமைகளை சமயக் கடமைகளுக்கு மேலாக பாஸ் வைத்துள்ளதாக பல இஸ்லாமிய அறிஞர்களை மேற்கோள் காட்டி உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.
ஒருவர் சமாளிக்க முடியும் போது ஹஜ் கடமையை தள்ளி வைப்பது தார்மீகப் பண்புகளுக்கு முரணானது என அந்த அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அந்தக் குறை கூறல்களுக்கு துவான் இப்ராஹிம் நேரடியாகப் பதில் அளிக்கவில்லை என்றாலும் தேர்தல் தேதி மீது ஆரூடங்களை கூறுவதற்கு பொது மக்களைக் கட்டாயப்படுத்துவதின் மூலம் நஜிப் நிச்சயமற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாகச் சாடினார்.
தேர்தல் தேதி குறித்து முன் கூட்டியே அறிவிப்பு செய்ய நஜிப் தயங்குவது பிஎன்-னின் நிலையே உறுதியற்றதாக இருப்பதைக் காட்டுவதாகவும் துவான் இப்ராஹிம் சொன்னார்.