அன்வார் இப்ராஹிம் பில்லியன் கணக்கான ரிங்கிட்டை மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டி நேற்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்ட நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் (என்எஸ்டி) அதனை மீட்டுக் கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் என அந்த எதிர்த்தரப்புத் தலைவர் அந்த ஆங்கில மொழி நாளேட்டுக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அன்வார் தமது வழக்குரைஞர்கள் வழி நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பிரஸ் (ம) பெர்ஹாட்டுக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் அந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார்.
‘அன்வார் ஆணையிட்டார்’ என்னும் தலைப்பில் முதல் பக்கத்தில் அந்தச் செய்தி வெளியிடப்பட்டது, அன்வாருக்கு கூடின பட்சம் அரசியல் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது என பிகேஆர் உதவித் தலைவரும் வழக்குரைஞருமான என் சுரேந்திரன் கூறினார்.
பிஎன்-னுக்குச் சொந்தமான அந்த ஊடகம் தவறான செய்தியை வெளியிட்டதின் மூலம் “நியாயமான தகவல்களைப் பெறுவதற்கு பொது மக்களுக்கு உள்ள உரிமையை கடுமையாக கீழறுப்புச் செய்துள்ளதாக” அவர் குறிப்பிட்டார்.
அந்தப் போக்கைத் தடுத்து நிறுத்த பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
1999ம் ஆண்டு மில்லியன் கணக்கான ரிங்கிட்டை தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியோரின் கணக்குகளில் போடுமாறு அன்வார் தமக்கு ஆணையிட்டதாக வங்கி ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரி ஏசிஏ என்ற ஊழல் தடுப்பு நிறுவனத்திடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக என்எஸ்டி செய்தி தெரிவித்தது.
அன்வார் துணைப் பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் இருந்த போது அவருடைய அதிகார அத்துமீறல். ஊழல் எனக் கூறப்பட்டது மீது ஏசிஏ (இப்போது எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்) புலனாய்வு செய்த போது ஆதாரத்தைக் கண்டு பிடித்ததாக அந்த ஏடு குறிப்பிட்டது.
ஆனால் நிதிகளை மாற்ரி விடுவதற்கான உத்தரவுகள் வாய்மொழியாக பிறப்பிக்கப்பட்டதாலும் சரியான ஆவணங்கள் இல்லாததாலும் அந்தத் தலைமை நிர்வாக அதிகாரியை ஏசிஏ சாட்சியாக வழங்க முடியவில்லை என்றும் சில வட்டாரங்களை மேற்கோள் காட்டிய அந்தச் செய்தி தெரிவித்தது.