லிம் கிட் சியாங்: புரட்சி முயற்சி எனக் கூறுவதை நிரூபிக்க அரசாங்கம் தவறி விட்டது

பெர்சே 3.0 பேரணி புரட்சி முயற்சி எனத் தான் கூறிக் கொள்வதற்கு ஆதாரத்தைக் காட்ட கூட்டரசு அரசாங்கம் தவறி விட்டதாக டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார்.

‘உப்பையும் தண்ணீர் போத்தல்களையும் கொண்டு’ பெர்சே ஆதரவாளர்கள் அரசாங்கத்தை வீழ்த்தியிருக்க முடியும் என சட்டத் துறைக்கு பொறுப்பான அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் சொல்லியிருப்பது அரசாங்கம் ஆதாரத்தைக் காட்ட முடியாமல் இருப்பதைக் காட்டுவதாக அவர் சொன்னார்.

கேள்வி நேரத்தின் போது லிம்-முக்குப் பதில் அளித்த நஸ்ரி அவ்வாறு கூறியிருந்தார்.

ஏப்ரல் 28 பெர்சே 3.0 பேரணியில் பங்கு கொண்டவர்கள் உப்பையும் தண்ணீர் போத்தல்களையும் மட்டுமே வைத்திருந்த வேளையில் அதனை புரட்சி முயற்சி என ஏன் அரசாங்கம் வருணித்தது என்பதை விளக்குமாறு லிம் பிரதமரைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எடுத்த நிலைக்கு ஆதரவாக பெர்சே புரட்சி முயற்சி என்று மூன்று முன்னாள் போலீஸ் படைத் தலைவர்களான மூசா ஹசான், ரஹிம் நூர், ஹனீப் ஒமார் ஆகியோரும் கருத்து வெளியிட்டிருந்தனர்.

நஸ்ரியின் பதில் “முழு ஏமாற்றம்” என வருணித்த லிம், பெர்சே 3.0 பேரணி அரசாங்கத்தை பலத்தின் மூலம் வீழ்த்தும் முயற்சி என்ற பொறுப்பற்ற குற்றச்சாட்டுக்களுக்கு பிரதமரிடமோ அந்த மூன்று முன்னாள் போலீஸ் தலைவர்களிடமோ இல்லை என்பது இப்போது தெளிவாகி விட்டது.”

“ஆனால் ‘உப்பையும் தண்ணீர் போத்தல்களையும்’ கண்டு நஜிப் அரசாங்கம் அஞ்சுகிறது. காரணம் அவை மக்கள் ஆதரவை இழந்து விட்ட அரசாங்கங்களை வீழ்த்த முடியும்,” என்றார் லிம்.

உள் நோக்கம் ?

அரசாங்கம் தனது கூற்றுக்கு ஆதாரத்தை வழங்க முடியாமல் இருப்பதால் பிரதமரும் முன்னாள் போலீஸ் தலைவர்களும் ‘ஆதாரமற்ற’ தங்கள் கருத்துக்களுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்ரும் லிம் வலியுறுத்தினார்.

“இரண்டாவதாக அரசாங்கம் பெர்சே 3.0 வன்முறை, முரட்டுத்தனம் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட ஹனீப் சுயேச்சை ஆலோசனைக் குழுவைக் கலைக்க வேண்டும்.”

என்றாலும் அந்தக் குழுவில் ஹினீப் சேர்க்கப்பட்டதற்கு உள் நோக்கம் இருக்கக் கூடும் எனக் குறிப்பிட்ட லிம், அதாவது பெர்சே பேரணி உண்மையில் புரட்சி முயற்சி என்பதை மெய்பிப்பதற்காகவும் இருக்கலாம் என்றார்.

அந்தப் பேரணிக்குப் பின்னர் பெர்சே எதிர்ப்பு நிலையை ஹனீப் அறிவித்துள்ளதால் அவர் அந்த விசாரணைகளுக்கு தலைமை ஏற்கத் தகுதியானவர் இல்லை என்பதை பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதற்குப் பதில் பெர்சே பேரணியின் போது நிகழ்ந்ததாக கூறப்படும் வன்செயல்களை விசாரிக்கும் மனித உரிமை ஆணையத்துக்கு அரசாங்கம் முழு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் லிம் வலியுறுத்தினார்.

TAGS: