அடுத்த பொதுத் தேர்தலில் எதிர்த்தரப்பான பக்காத்தான் ராக்யாட் 100 நாடாளுமன்ற இடங்களை வெல்லும் என முடிவு செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட வழி முறை தவறானது என ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுதீன் கூறுகிறார்.
ஏனெனில் பெர்சே 2.0, கிராமப்புறங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியமில்லை என கைரி மலேசியாகினியிடம் நேற்று தெரிவித்தார்.
பக்காத்தான் கட்டுக்குள் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த கிராமப்புறங்களும் அதில் அடங்கும் என்றார் அவர்.
“பெர்சே 2.0 தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் நாங்கள் (பிஎன்) சந்தேகம் கொள்ளவில்லை. நாங்கள் அதனை அறிந்துள்ளோம். குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் அதன் தாக்கம் உள்ளது. கிராமப்புறத் தொகுதிகளில் அதன் தாக்கம் இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை.”
“பிஎன் 20 இடங்கள் வரை இழக்கும் எனச் சொல்வது பெர்சே தாக்கத்தை மிகைப்படுத்துவதாகும்,” என கைரி தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.
தூய்மையான நேர்மையான தேர்தல்களுக்கான கூட்டணி நடத்திய ஜுலை 9 பேரணியைத் தொடர்ந்து அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் நாடாளுமன்றத்தில் 100 இடங்கள் வரை பிடிக்கக் கூடும் என அரசியல் ஆய்வாளர் வோங் சின் ஹுவாட் தெரிவித்துள்ள ஆரூடம் பற்றி கைரி கருத்துரைத்தார். இப்போது எதிர்க்கட்சிகள் வசம் 75 இடங்கள் உள்ளன.
பெர்சே 2.0க்கு எதிராக அரசாங்கம் எடுத்த கடும் நடவடிக்கை காரணமாக திரிசங்கு நிலையில் உள்ள வாக்காளர்கள், பக்காத்தானுக்கு வாக்களிக்கா விட்டாலும் பிஎன்னுக்கு எதிர்ப்பு வாக்கை செலுத்தக் கூடும் என்று வோங் கருதுகிறார்.
தேர்தல் குளறுபடிகள் ஏதும் நிகழாது இருந்தால் 2008 தேர்தலில் பிஎன், குறைந்த வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்ற 20 முதல் 30 இடங்களை இழக்கக் கூடும் என அவர் சொன்னார்.
அந்த இடங்கள் பெரும்பாலும் நகரங்களையும் பகுதி நகர்ப்புறங்களையும் சார்ந்தவை. அதில் பக்காத்தான் கட்டுக்குள் இருக்கும் மாநிலங்களில் உள்ள கிராமப்புற இடங்களும் அடங்கும். அங்கு பாஸ் கட்சிக்கு வலுவான ஆதரவு உள்ளது.
வாழ்க்கை செலவு அம்சம்
வோங் குறிப்பிட்டுள்ள கிராமப்புறத் தொகுதிகளில் சுங்கை புசாரும் ஒன்றாகும். அந்த இடம் முழுக்க முழுக்க கிராமப்புறமாக இருப்பதால் பட்டியலில் அது சேர்க்கப்பட்டிருக்கவே கூடாது என்றார் கைரி.
பெர்சே 2.0 பேரணி நிகழ்ந்த பல மாதங்களுக்குப் பின்னரே அதன் உண்மையான தாக்கத்தை அளவிட முடியும். ஏனெனில் தேர்தல் சீர்திருத்தத்தை நாடிய அந்தப் பேரணியை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொண்டது என்பதையும் வாக்காளர்கள் ஆராய வேண்டும். என அவர் மேலும் சொன்னார். மக்கள் எவ்வாறு கருதுகின்றனர் என்பதை நிர்ணயம் செய்வதற்கு அந்தப் பேரணி மட்டும் போதாது.”
வாக்காளர் உணர்வுகளை உருவகப்படுத்த்தக் கூடிய “வேறு பல அம்சங்களும்” இருப்பதாக பிஎன் இளைஞர் பிரிவுத் தலைவருமான கைரி சொன்னார்.
“பொருளாதாரப் பிரச்னைகள் எல்லாத் தரப்புக்களையும் பாதித்துள்ளன. வாழ்க்கை செலவின உயர்வு, பெர்சே 2.0ன் தாக்கத்தைக் காட்டிலும் பெரிய தாக்கத்தை கொண்டுள்ளது.”