பாக் சாமாட்: துங்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டவர் மட்டுமே

“சுதந்திரத் தந்தை” எனச் சொல்லப்படுகிற துங்கு அப்துல் ரஹ்மான்,  சுதந்திரத்தை பெற்றுக் கொண்டவர் மட்டுமே என தேசிய இலக்கியவாதியான ஏ சாமாட் சையட் கூறுகிறார்.

மலாயாவில் உள்ள தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்கள் துங்குவைத் தேர்வு செய்தனர் என்றார் அவர்.

“என்னைப் பொறுத்த வரையில் துங்கு சுதந்திரப் போராட்ட வீரர் அல்லர். அவர் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டார். அவர் சுதந்திரத்தைப் “பெற்றுக் கொள்வதற்கு” பிரிட்டிஷ்காரர்களால் அங்கீகரித்தவர் ஆவார்.”

மலாயாவில் தங்கள் நலன்களைப் பாதுகாக்கக் கூடியவராக “பெற்றுக் கொள்கின்றவர்” இருக்க வேண்டும் என பிரிட்டிஷ்காரர்கள் கருதினர்.

பாக் சாமாட் என்றும் அழைக்கப்படும் அவர் நேற்றிரவு கோலாலம்பூரில் பொதுக் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றினார்.

சுதந்திரத்துக்கு முந்திய காலத்தில் 80 வயதான பாக் சாமாட், இடச்சாரித் தலைவரான அகமட் போஸ்தமாம் போன்றவர்களுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறார்.

போஸ்தமாம், இன்னொரு இடச்சாரி அரசியல்வாதியான புர்ஹானுடின் அல் ஹெல்மி, துங்கு ஆகியோருடன் சுதந்திரம் பற்றி பேச்சு நடத்திய பின்னர் பிரிட்டிஷார் நாட்டை ஒப்படைக்க விரும்பும் பொருத்தமான  வேட்பாளர் துங்கு எனக் கூறியதாக பாக் சாமாட் சொன்னார்.

ஆகவே போஸ்தமாம், மாட் கிலாவ், புர்ஹானுடின் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் ஒப்பிடுகையில் துங்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டவரே (penyambut kemerdekaan) என அவர் கருதுகிறார்.

“சுதந்திரத்துக்குப் போராடுவதற்காக போஸ்தமாம், புர்ஹானுடின் போன்றவர்கள் தங்கள் சொந்த அரசியல் கட்சிகளை தொடங்கிய பின்னரே அம்னோ தோற்றுவிக்கப்பட்டது.”

“பிரிட்டிஷ்காரர்கள் இடச்சாரி அரசியல்வாதிகளுடன் பேச்சு நடத்த விரும்பவில்லை. ஏனெனில் பிரிட்டிஷ்காரர்கள் விட்டுச் செல்லும் நலன்களை அந்த அரசியல்வாதிகள் பாதுகாக்க மாட்டார்கள்”, என்றார் சாமாட்.

“சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தவர்கள் அரசியல் அதிகாரத்தை தங்கள் கட்டுக்குள் வைத்திருந்ததால் சுதந்திரத்துக்குப் போராடிய தனிநபர்களுக்கு ஆட்சி புரிவதற்கான வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

இளைய தலைமுறையினருக்கு அவசர வேண்டுகோள்

“துங்கு, அப்துல் ரசாக் ஹுசேன், ஹுசேன் ஒன் ஆகியோர் சமூகத்தில் உயர்ந்த பிரிவைச் சார்ந்தவர்கள்.”

மகாதீர் அந்தப் பிரிவைச் சார்ந்தவர் அல்ல. ஆனால் துன் பட்டம் கிடைத்ததும் அவரும் மாறி மேல் வர்க்கத்தினராகி விட்டார். அப்துல்லாவும் நஜிப்பும் கூட  (படாவி) சமூகத்தில் மேல் மட்டத்தில் உள்ளவர்களே.”

 “ஆகவே நடப்பு அரசாங்கத் தலைவர்கள் நடுத்தர, மேல் வர்க்கத்தைச் சார்ந்தவர்களுடைய நலன்களைப் பாதுகாப்பதிலேயே அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். அவர்கள் அடி நிலை மக்களுடைய பிரச்னைகளைப் புரிந்து கொள்ளவில்லை.”

புதிய தலைமுறை மாற்றத்தைக் கொண்டு வரும் என அவர் நம்புகிறார். நடப்பு நிர்வாகத்தை மாற்றுவது என அவர்கள் துணிச்சலாக முடிவு எடுக்க வேண்டும் என்றார் பாக் சாமாட்.

“நான் பக்காத்தான் ராக்யாட் நல்லது எனச் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் முயற்சி செய்யாமல் அது உங்களுக்குத் தெரியப் போவதில்லை.”

“யாருடைய சுதந்திர தினம்” என்னும் கருப் பொருளுடன் நிகழ்ந்த அந்தக் கருத்தரங்கில் இரு மொழிகளில் கட்டுரை எழுதக் கூடிய லீ பான் சென், சுவாரா ராக்யாட் தலைவர் கே ஆறுமுகமும் பேசுவதற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

லீ, 1960களில் தொழிற்சங்கவாதியாகவும் தொழிலாளர் கட்சியில் தீவிர உறுப்பினராகவும் இருந்துள்ளார். மலாயா கம்யூனிஸ்ட்களின் ‘கொடூரங்கள்’ என்னும் தலைப்பில் சித்தரங்களை வெளியிட்ட உத்துசான் மலேசியாவை அவர் சாடினார்.

அந்தச் சித்தரங்களில் சித்தரிக்கப்பட்ட தவறான காரியங்கள், உண்மையில் நடந்தவை என்பதை மெய்பிக்குமாறு அம்னோவுக்கு சொந்தமான அந்த மலாய் மொழி நாளேட்டுக்கு அவர் சவால் விடுத்தார்.

“மலாயா கம்யூனிஸ்ட்கள் சாதாரண மக்களுக்கு இழைத்த “கொடுமைகள்” என அம்பலப்படுத்துவதற்கு ஒவியர் ஹம்சா முகமட் அமின் வரைந்துள்ள சர்ச்சைக்குரிய ஆறு சித்தரங்களை கடந்த செவ்வாய்க்கிழமை உத்துசான் மலேசியா வெளியிட்டது.

முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு முன்னர் பன்றி இறைச்சியை சாப்பிடுமாறு  கட்டாயப்படுத்தப்படுவது; குழந்தைகளும் முதியவர்களும் நெருப்புக்குள் எறியப்படுவது; இறந்தவர்களின் சடலங்கள் காய்கறித் தோட்டங்களில் உரமாக பயன்படுத்தப்படுவது ஆகியவற்றைக் காட்டும் சித்திரங்களும் அவற்றுள் அடங்கும்.

அரசாங்கம் கம்யூனிஸ்ட்களை தொடர்ந்து தாக்குவது, மலாயா கம்யூனிஸ்ட் கட்சியும் மலேசிய அரசாங்கமும் 1989ம் ஆண்டு கையெழுத்திட்ட ஹட்யாய் அமைதி ஒப்பந்தத்திற்கு முரணானது என்றும் லீ சொன்னார்.

“மலாயா கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக அரசாங்கம் பகைமைப் போக்கைப் பின்பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை அதற்கு எதிராக சுமத்த முடியுமா?”

“அரசாங்கம் இன்னும் ஹட்யாய் அமைதி ஒப்பந்தத்தை அங்கீகரிக்கிறதா ? அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்களை அது இன்னும் பின்பற்றுகிறதா?

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மலாயா கம்யூனிஸ்ட் கட்சி எதுவுமே செய்யவில்லை. அது அரசியலிலும் சம்பந்தப்படுவதே இல்லை.”

“சுதந்திரப் போராட்டத்தில் இடச்சாரிப் போராளிகளும் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியும் ஆற்றிய பங்கு குறித்து பாஸ் துணைத் தலைவர் மாட் சாபு பேசி விட்டதால் மலாயா கம்யூனிஸ்ட் கட்சி மீது உடனடியாகத் தாக்குதல் தொடுக்கப்படுகிறது”, என்றார் அவர்.