முன்னாள் போலீஸ் அதிகாரி மாட் ஜைன்னுக்கு அரசியல்வாதி ஆக விருப்பமில்லை

பணி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரிகள் மாற்றரசுக் கட்சிகளில் சேரும் போக்கு அதிகரித்துகொண்டு வேளையில் கோலாலம்பூர் குற்றப்புலன் ஆய்வுத் துறை(சிஐடி)த் தலைவராக இருந்து பணி ஓய்வுபெற்றவரான மாட் ஜைன் இப்ராகிமுக்கு அரசியல்வாதி ஆவதில் கொஞ்சமும் விருப்பம் இல்லை.

2001-இல், பணி ஓய்வுபெற்ற மாட் ஜைன், முன்னாள் போலீஸ்படைத் தலைவர் மூசா ஹசனையும் சட்டத்துறைத் தலைவரையும் குறைகூறிவருவோரில் ஒருவராவார்.முன்னாள் புக்கிட் அமான் சிஐடி தலைவர் பவுஸி ஷாரி பாஸ் கட்சியில் சேர்ந்ததுபோல் மாட் ஜைன்னும் ஓர் அரசியல் கட்சியில் சேரப்போகிறார் என்று வதந்திகள் உலவியது உண்டு.

“பவுஸி, சேர்ந்து விட்டார்.நானும் சேர வேண்டும் என்று பலரும் சொல்கிறார்கள்.ஆனால், இப்போதைக்கு அப்படிப்பட்ட எண்ணம் கிடையாது”, என்றாரவர்.

“ஆனால்,நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது”.

ஆக, அரசியல்வாதி ஆவதை அவர் ஒரேயடியாக மறுக்கவில்லை.

இவ்வாண்டு தொடக்கத்தில் கெடாவில் பக்காத்தான் ரக்யாட் கூட்டமொன்றில் அவர் கலந்துகொண்டு பேசுவார் என்ற வதந்தி பலமாகவே அடிபட்டது.ஆனால், அவர் அதை மறுத்தார். அதற்கான அழைப்பு எதையும் பெறவில்லை என்றார்.

ஒரு வேளை, அரசியல் நடப்புகள் குறித்து தாம் எழுதிய கட்டுரைகளைப் பார்த்து பக்காத்தான் தலைவர்கள் தம்மை ஒரு பேச்சாளராக அழைக்க விரும்பியிருக்கலாம் என்றார்.

“அப்படியே அழைத்திருந்தாலும் நான் போயிருக்க மாட்டேன்.அந்த நோக்கமே இல்லை.என்னால் ஓர் அரசியல்வாதியாக முடியாது என்பது எனக்குத் தெரியும்”, என்றார்.

அரசாங்கத்தைக் குறைகூறுவதற்காக அவருக்குப் பணம் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுவதையும் மாட் ஜைன் மறுத்தார்.

“பணம் தேவையென்றால்,(பிரதமர்) நஜிப்(அப்துல் ரசாக்)பையும் (அவரின் மனைவி)ரோஸ்மா(மன்சூர்)வையும் போய்ப் பார்த்திருப்பேன்.ஏன் அவர்களை(மூசாவையும் அப்துல் கனியையும்)போட்டுத் தாக்க வேண்டும்?

“அன்வரால் எனக்கு எவ்வளவு கொடுக்க முடியும்?” என்றும் வினவினார்.