பொதுத் தேர்தல் முடிந்ததும் 2015-இல் சாலைக்கட்டணங்கள் உயரும் என்று பாஸ் இளைஞர்கள் எச்சரிக்கின்றனர்.
2011 நவம்பரில் செய்துகொள்ளப்பட்ட துணை ஒப்பந்தமொன்று பிளஸ், 2015-க்குப் பின்னர் சாலைக்கட்டணத்தை உயர்த்த இடமளிக்கிறது. 2038-வரை மூன்றாண்டுகளுக்கு ஒரு தடவை ஐந்து விழுக்காடு என்று சாலைக்கட்டணம் உயர்த்தப்படும் என்றது கூறியது.
முன்பு நிகழ்ந்ததுபோல் சாலைக்கட்டணத்தில் 10விழுக்காடு உயர்வு இருக்காது என்பது உண்மைதான் என்றாலும் சாலைக்கட்டணம் குறைந்த விகிதத்தில் உயர்த்தப்பட்டாலும் அதனால் மக்களுக்குத் துன்பம்தான் என்று பாஸ் பயனீட்டாளர் சுற்றுசூழல் குழுத் தலைவர் முகம்மட் பிர்டூஸ் ஜாஃபார் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
அரசாங்கம், 2011 தொடங்கி அடுத்த ஐந்தாண்டுகளுக்குச் சாலைக்கட்டணம் உயர்த்தப்படாது என்று சொல்லி வருகிறது.இது ஒரு அரசியல் விளையாட்டு.2015-க்குப் பின்னர் அது உயரும் என்பது அதற்குத் தெரியும் என்றார் பிர்டூஸ்.
அந்த வகையில் ஒரு சில நிறுவனங்கள் கொள்ளை லாபம் பெறுவதற்கு பிஎன் வழி அமைத்துக் கொடுக்கிறது என்று பிர்டூஸ் குறைகூறினார்.
“சாலைக்கட்டணத்தை அடியோடு அகற்றாவிட்டாலும் அதைக் குறைப்பதற்குக்கூட அரசாங்கம் முயற்சி செய்வதில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.
“அரசாங்கம் சாலைக்கட்டண ஒப்பந்தங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற கடப்பாடு எதுவும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை.அது விரும்பினால் நாட்டில் சாலைக்கட்டணத்தை முற்றாக அகற்றிவிடலாம்”, என்றாரவர்.
மக்களின் நலனைப் போற்றும் பக்காத்தான் ரக்யாட் ஆட்சிக்கு வந்தால் புக்கு ஜிங்காவில் (Buku Jingga) குறிப்பிட்டுள்ளபடி எல்லா முக்கிய சாலைகளிலும் சாலைக்கட்டணம் அகற்றப்படும் பிர்டூஸ் கூறிக்கொண்டார்.