ஆதாரச் சட்டத் திருத்தங்கள் ரத்துச் செய்யப்பட வேண்டும் என கைரி விரும்புகிறார்

சர்சைக்குரிய ஆதாரச் சட்டத் திருத்தங்களை அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் கண்டித்துள்ளார்.

புதிய விதிமுறைகள் ஆதாரத்தைக் காட்டும் பொறுப்பை இணைய மக்கள் மீது திணிப்பதாக அவர் சொன்னார்.

அந்தச் சட்டத் திருத்தங்களை எதிர்த்துள்ள முதலாவது பிஎன் தலைவர் கைரி ஆவார்.

“ஆதாரத்தைக் காட்டும் பொறுப்பு எப்போதும் குற்றம் சாட்டுகின்றவரையே சார்ந்திருக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் மீது அல்ல. அந்தத் திருத்தங்கள் சரியானவை அல்ல என நான் எண்ணுகிறேன்.”

“நான் அவை குறித்து வருத்தமடைந்துள்ளேன்,” என கோலாலம்பூரில் நேற்றிரவு பிஎன் இளைஞர் தொண்டர்களுடன் கலந்துரையாடிய பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

அந்தச் சட்டத்தின் 114(ஏ) பிரிவின் கீழ் எந்த ஒரு பதிவும் காணப்படும் இணையத் தளத்தின் உரிமையாளர், ஆசிரியர் அல்லது நிர்வாகி அல்லது அந்தப் பதிவு செய்யப்பட்ட இணையத் தொடர்பு அல்லது சாதனத்தின் உரிமையாளர்- வேறு வகையாக நிரூபிக்கப்பட்டால் தவிர – அந்தப் பதிவை செய்ததாகக் கருதப்படுவார்.

அந்தத் திருத்தங்கள் மின்னியல் ஊடகங்களை பாதகமான சூழ்நிலையில் வைத்து விடும் என அவற்றைக்  குறை கூறுகின்றவர்கள் கருதுகின்றனர். அதே வேளையில் இணையத்தைப் பயன்படுத்துகின்ற Wi-Fi என்ற இணையத் தொடர்பு வசதிகளை வழங்குகின்ற அப்பாவிகள் மீது – மற்றவர்கள் செய்யும் பதிவுகளுக்காக தவறாக வழக்குத் தொடரப்படலாம்.