டேனியர் மலேசிய பிரஜையாக இருக்கக் கூடும் என்கிறார் நியூயார்க் வழக்குரைஞர்

பிரதமர் நஜிப் ரசாக்கின் புதல்வி நூர்யானா நாஜ்வா-வைத் திருமணம் செய்து கொள்வதற்கு நிச்சயிக்கப்பட்டுள்ள டேனியர் நஸர்பயேவ் ஏற்கனவே மலேசியப் பிரஜையாகி இருக்கக் கூடிய சாத்தியம் உள்ளதாக நியூயார்க் நீதிமன்றம் ஒன்றில் சமர்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

“டேனியர் கஸக்ஸ்தான், மலேசியா ஆகியவற்றின் பிரஜை என நம்பப்படுகிறது. அவர் இப்போது எங்கு வசித்து வருகிறார் என்பது யாருக்கும் தெரியாது,” என டேனியரின் முன்னாள் மாற்றான் தந்தையான போலாட் நஸர்பயேவை பிரதிநிதிக்கும் வழக்குரைஞர் ஜான் ஸ்னிடர் கூறினார்.

அந்த ஆவணங்களை நீதிமன்றம் இணையத்தில் சேர்த்துள்ளது.

கஸக்ஸ்தான் அதிபர் நுருசுல்தான் நஸர்பயேவின் சகோதரரான போலாட், 20 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பிளாஸா ஹோட்டல் ஆடம்பர அடுக்கு மாடி வீட்டையும் வால் ஸ்டீரிட்டில் உள்ள இரண்டு இதர ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளையும் மோசடி செய்து தம்மிடமிருந்து எடுத்துக் கொண்டதாக 24 வயதான டேனியர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கில் போலாட்டை பத்து ஆண்டுகளுக்கு மணம் செய்து கொண்டிருந்த டேனியரின் தாயார் மைராவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

அவர்களுடைய திருமணம் கடந்த ஆண்டு ரத்துச் செய்யப்பட்டதாக மான்ஹாட்டன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணம் கூறியது.

மைரா ‘கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் ஆகியவை உட்பட பல குற்றங்களுக்காக’ அதிகாரிகளினால் தேடப்படுவதை போலாட் கண்டு பிடித்ததாகக் கூறப்பட்ட பின்னர் அந்தத் திருமணம் ரத்துச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

டேனியர் அந்த அடுக்குமாடி வீட்டை தமது மாற்றான் தந்தையின் பெயரில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் தமது தாயாரின் பெயரை அதில் சேர்த்துக் கொண்டார். எட்டு மாதங்களுக்குப் பின்னர் தாயார் அதனை டேனியருக்கு ஒரு டாலருக்கு விற்றுள்ளதாக நீதி மன்ற ஆவணங்கள் கூறுகின்றன”,  நியூயார்க் போஸ்ட் தெரிவித்தது.

டேனியர் போலிப் பத்திரங்களைப் பயன்படுத்தி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளதாகவும் அந்த ஆவணங்கள் குறிப்பிட்டுள்ளன.

‘தனிப்பட்ட குடும்ப விவகாரம்’

இதனிடையே டேனியரின் தாயார் மைரா, தமது புதல்வருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ‘அபத்தமானவை’ என்றும் அரசியல் தில்லுமுல்லு என்றும் வருணித்துள்ளார்.

“இது தனிப்பட்ட குடும்ப விவகாரமாகும். அரசியல் நோக்கம் கொண்ட தரப்புக்களினால் அந்த விவகாரம் தில்லுமுல்லு செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது,” என மைரா  தமது பொது உறவுப் பேச்சாளர் வழி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தாமும் போலாட்டும் மணவிலக்குச் செய்து கொண்டுள்ளதாகக் கூறப்படுவதையும் மைரா மறுத்துள்ளார்.

“நான் இன்னும் திருமணம் செய்து கொண்டுள்ளதாகவே கருதுகிறேன். என் கணவருடன் நல்ல உறவுகளை வைத்துள்ளேன். நான் மணவிலக்கு தொடர்பான ஆவணம் எதனையும் பார்க்கவே இல்லை. நான் எதிலும் கையெழுத்திடவும் இல்லை, எதனையும் பெறவும் இல்லை,” என அவர் சொன்னதாக நியூயார்க் போஸ்ட்டில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இன்னொரு நிலவரத்தில் டேனியர் மீது சுமத்தப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டுக்கள் ‘மிகைப்படுத்தப்பட்டவை’ என பிரதமரின் மனைவி ரோஸ்மா மான்சோருக்கு அணுக்கமான வட்டாரம் ஒன்று கூறியுள்ளது.