கடந்த வாரம் உலக மயம் குறித்து தோக்கியோவில் நிகழ்ந்த மாநாடு ஒன்றில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் பேசினார்.
அதில் அவர் தமக்குப் பிரியமான தலைப்புக்களான நல்ல ஆளுமை, சமமான வாய்ப்புக்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
உலக மயம் நல்ல வாய்ப்புக்களைக் கொண்டு வருவதைப் பாராட்டிய அவர், அதனால் ஏற்படுகின்ற ஏற்றத்தாழ்வு பற்றி வருத்தம் தெரிவித்தார். அந்த ஏற்றத்தாழ்வைப் போக்குவதற்கு அவர் தீர்வுகளையும் வழங்கினார்.
கடந்த வாரம் நாடாளுமன்றக் கூட்டம் நிறைவுக்கு வந்ததும் வியாழக்கிழமை ஜப்பானிய தலைநகருக்கு அன்வார் சென்றார்.
‘உலக மயம்: ஏற்றத்தாழ்வும் சமூக நீதியும்’ என்னும் தலைப்பில் நிகழும் அந்த மாநாட்டில் அவர் தொடக்க உரையாற்றினார்.
உலக மயம் சிக்கலான பொருளாதார முறைகளை சமாளிக்கும் ஆற்றலைக் கொண்ட அதிகார வர்க்கத்தினருக்கு பெரும் செல்வத்தை உருவாக்கி தந்துள்ளதாக அன்வார் தமது உரையில் சொன்னார்.
“விதிமுறைகளைத் தளர்த்துவது, கட்டுப்பாடு இல்லாத சந்தைகள், சமநிலையான வரவு செலவுத் திட்டம் ஆகியவற்றை வலியுறுத்தும் உலக மயம் கொண்டு வரும் நன்மைகள நான் குறைத்து மதிப்பிடவில்லை.”
“அந்த நடைமுறைகளினால் வர்த்தகமும் முதலீடும் பெருகியதால் வளர்ச்சி குன்றிய நாடுகளில் வறுமையைப் போக்க முடிந்துள்ளது,” என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.
“ஆனால் அந்த நன்மைகளுக்கு அதிகமான விலை கொடுக்க வேண்டியுள்ளது-அது தான் வெளிப்படையாகத் தெரியும் வருமான இடைவெளி- மக்களுக்கு இடையில் மட்டுமின்றி வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் நல்ல ஆளுமையும் வெளிப்படையான போக்கும் இல்லாததால் வளரும் நாடுகளிலும் உருவாகியுள்ளது.”
“இந்த கால கட்டத்தில் தொழில்நுட்ப சாதனைகளைப் படைத்தவர்கள் சிலர் செல்வத்தைச் சேர்ப்பது பற்றி யாரும் பொறாமை கொள்ளப் போவதில்லை. ஆனால் அதில் பெரும்பகுதி பங்குச் சந்தையிலும் நாணயச் சந்தையிலும் சூதாடுகின்றவர்களுக்குப் போகும் போது கட்டுப்பாடு இல்லாத சந்தை என்ற கோட்பாடு நலிவடைந்து விடுகிறது,” என்றார் அன்வார்.
நேர வெடி குண்டு
வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் வளரும் நாடுகளிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும் போது “அவை நேர வெடி குண்டுகளாகி” விடுகின்றன. சமூக நீதி, பொருளாதார சமநிலை ஆகியவற்றின் வழியே அவற்றைச் செயலிழக்கச் செய்ய முடியும் என்றார் அந்த பக்காத்தான் ராக்யாட் தலைவர்.
வருமான இடைவெளி முன்னேறிய நாடுகளைக் காட்டிலும் வளரும் நாடுகளில் விரைவான விகிதத்தில் அதிகரித்து வருகிறது. வளர்ச்சிக்கும் வருமானத்தை விநியோகம் செய்யவும் சுயேச்சையான சந்தை முறையை முழுக்க முழுக்க நம்பியிருப்பதும் பிரச்னையைக் கடுமையாக்கும் என்றார் அவர்.
ஆகவே உலக மயம் தொடர்பில் மேலும் அர்த்தமுள்ள பயனுள்ள வழிகள் காணப்பட வேண்டும். அவை வறுமையை ஒழிப்பதற்கும் மக்கள் தங்கள் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கும் அவசியமான நல்ல ஆளுமை சமூக நீதி ஆகியவற்றை நிறைவேற்றுவதாகவும் இருக்க வேண்டும்.
வருமான ஏற்றத்தாழ்வை மதிப்பிடும் Gini coefficient முறை, மலேசியா ஆசியாவில் வருமான ஏற்றத்தாழ்வு மிக அதிகமாக உள்ள நாடு எனக் குறிப்பிட்டுள்ளது. மலேசியாவில் செல்வந்தர்களுக்கும் ஏழை மக்களுக்கும் இடையில் காணப்படும் வருமான இடைவெளி பாப்புவா நியூகினிக்கு அடுத்த நிலையில் உள்ளது.