அரச குடும்பத்தினர் மீது மலாய்க்காரர்களே குறை கூறுவது கண்டு தாம் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளதாக ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம், டிவிட்டர் பதிவில் நேற்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது தந்தையான ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மார்ஹும் சுல்தான் அண்மையில்WWW1 இஸ்காண்டார் WWW1 கார் எண் தகட்டை வாங்கியதை முன்னாள் பேராக் மந்திரி புசார் முகமட் நிஜார் ஜமாலுதின் குறை கூறியிருப்பது மீது தாம் வருத்தமடைந்துள்ளதாக அந்த ஆட்சியாளர் தெரிவித்த சில நாட்களுக்குப் பின்னர் துங்கு இஸ்மாயிலின் செய்தி வெளியாகியுள்ளது.
மற்ற இனங்கள் ஆட்சியாளர்கள் மீது குறை கூறுவதில் நேரத்தை வீணாக்காமல் வாழ்க்கையில் வெற்றி அடைவதில் கவனம் செலுத்துவது ஏன் என்றும் அவர் வினவினார்.
மலேசியா அரசர் முறையைக் கைவிட்டால் மலாய்க்காரர்கள் ஒரங்கட்டப்பட்டு விடுவர் என்றும் அந்த 28 வயது இளவரசர் குறிப்பிட்டார்.
“பாசத்துக்குரிய நமது நாடு சிங்கப்பூரைப் போல மாறினால் மலாய்க்காரர்களுக்கு என்ன நடக்கும் என்பதைக் காண நான் விரும்புகிறேன். சிரமம் ஏற்பட்டால் அப்போது மன்னர் ஒருவரை தீவிரமாகத் தேட வேண்டாம்,” என்றார் அவர்
மக்கள் பகல் கனவு காண்பதை நிறுத்துக் கொண்டு இப்போது தங்களுக்கு இருப்பதை பாராட்டக் கற்றுக் கொள்ள வேண்டும் என அவர் ஐந்து வரிகள் அடங்கிய பதிவை முடித்துக் கொண்டுள்ளார்.
பாஸ் நம்பிக்கை
இதனிடையே நிஜார் பிரச்னை எதிர்வரும் பொதுத் தேர்தலில் அந்த மாநிலத்தை ஜோகூர் பாஸ் வெற்றி கொள்வதை பாதிக்காது என பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் அயூப் கருதுகிறார்.
ஜோகூர் மக்கள் அடைந்துள்ள அரசியல் முதிர்ச்சி அந்தப் பிரச்னை மீது முறையான கணிப்பைச் செய்வதற்கு வழி கோலும் என அவர் சினார் ஹரியான் நாளேட்டிடம் கூறினார்.
அந்த பாஸ் தலைவர் தமது சொந்த மாநிலமான ஜோகூரில் போட்டியிட எண்ணம் கொண்டுள்ளார்.
அரச குடும்பத்தினருக்கு எதிராக நடந்து கொள்வதில் அல்லது அவர்களை அவமானப்படுத்துவதில் பிஎன்-னுக்கே நீண்ட கால வரலாறு உண்டு என்றார் அவர்.
கூட்டரசு அரசமைப்பு அல்லது மாநிலச் சட்டங்களைத் திருத்துவது இல்லை என்பதே ஜோகூரில் எதிர்த்தரப்பு ஒப்பந்தமாகும். ஆகவே அரச குடும்பத்தினருக்கு தொடர்ந்து மரியாதை அளிக்கப்படும்.
இன்னொரு நிலவரத்தில் அந்த விவகாரம் மீது நிஜாருடன் பேசும் என்றும் மற்ற தரப்புக்களின் தலையீடு தேவை இல்லை என்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அந்த மலாய் மொழி நாளேட்டிடம் கூறியுள்ளார்.