நபிகள் நாயகம் ஹஜ் பயணத்தைத் தாமதப்படுத்தியதை பாஸ் சுட்டிக் காட்டுகிறது

ஹஜ் யாத்திரைக் காலத்தின் போது பொதுத் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் பாஸ் கட்சி உறுப்பினர்கள் தங்களது ஹஜ் பயணத்தை தள்ளி வைக்க வேண்டும் என அந்தக் கட்சி கேட்டுக் கொண்டுள்ளதை அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தற்காத்துப் பேசியிருக்கிறார்.

அது போன்ற முடிவு திருமெக்காவின் Quraish-டன் முகமது நபி பேச்சுக்கள் நடத்திய போது எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

“Hudaibiyah ஒப்பந்தம் அவர் தமது உம்ரா பயணத்தை அடுத்த ஆண்டுக்குத் தாமதிக்க வேண்டும் எனக் கூறிய போதிலும் முகமது நபி அந்த ஒப்பந்தத்தைச் செய்து கொண்டார்.”

“ஆனால் அந்த ஒப்பந்தம் மெதீனாவை சட்டப்பூர்வ நாடாக அங்கீகரித்தது. உம்ராவைத் தாமதப்படுத்தியதின் மூலம் நபிகள் நாயகம் அரசியல் வெற்றியை அடைவதற்கு வழி வகுத்த அரசியல் முடிவைச் செய்தார்,” என அவர் ஜோகூர் புக்கிட் பாசிரில் 300 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் கூறினார்.

புக்கிட் பாசிர், துணைப் பிரதமர் முஹைடின் யாசின் வசம் இருக்கும் பாகோ நாடாளுமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது.

பாஸ் கட்சி சமயத்த்திற்கு மேல் அரசியலை வைப்பதாக குறை கூறியுள்ள அம்னோவையும் அப்துல் ஹாடி சாடினார். அம்னோ வரலாற்றை அறியாத கட்சி என அவர் சொன்னார்.

“இஸ்லாத்துக்கான தனது போராட்டத்தில் அம்னோ ஒரு போதும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. காரணம் அது இஸ்லாம் அரசியலிலிருந்து விடுபட்டது என கருதுகிறது. ஆனால் அரசியல் இஸ்லாத்தின் ஒரு பகுதி என திருக்குர் ஆன் சொல்கிறது,” என்றார் பாஸ் தலைவர்.