அதிகமான சீன சுயேச்சைப் பள்ளிக்கூடங்களை அமைப்பதற்கு சீன கல்விப் போராட்ட அமைப்பான டோங் ஜோங் நடத்தும் இயக்கம் குழப்பத்தைக் கொண்டு வரும் என அரசு சாரா மலாய் அமைப்புக்களின் கூட்டணியான மலாய் ஆலோசனை மன்றம் (MPM) எச்சரித்துள்ளது.
அந்த டோங் ஜோங் இயக்கம் நாட்டின் பல வழிக் கல்வி முறைக்கு நிலைக்களனாக விளங்கும் 1956ம் ஆண்டு ரசாக் அறிக்கை 1960ம் ஆண்டு ரஹ்மான் தாலிப் அறிக்கை ஆகியவற்றின் உணர்வுகளுக்கு முரணாக அமைந்துள்ளது என அந்த மன்றத்தின் தலைமைச் செயலாளர் ஹசான் மாட் சொன்னார்.
டோங் ஜோங் இயக்கம், அந்த இரண்டு ஆவணங்களும் தீர்த்து விட்ட, 1961ம் ஆண்டு கல்விச் சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள ஒரு விவகாரத்தை மீண்டும் எழுப்பும் முயற்சி என மலாய் ஆலோசனை மன்றம் கருதுகிறது எனவும் அவர் சொன்னார்.
“தீர்க்கப்பட்டு விட்ட” ஒரு விஷயம் மீது தகராறு செய்வதற்கு டோங் ஜோங் அனுமதிக்கப்பட்டால் மற்ற தரப்புக்களும் அது போன்று செய்யக் கூடும் என்றார் அவர்.
“மலேசியாவில் உள்ள எல்லா இனங்களும் 50 ஆண்டுகளுக்கு முன்பு தீர்க்கப்பட்ட பிரச்னைகளை மீண்டும் எழுப்புவதற்கு அனுமதிக்கப்பட்டால் வளர்ச்சிக்கும் இன ஐக்கியத்துக்கும் இந்த நாட்டின் பொது அமைதிக்கும் என்ன நேரும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்,” என்றும் ஹசான் கூறினார்.
பாகாங்கில் சுயேச்சை சீன உயர் நிலைப் பள்ளிக் கூடம் ஒன்றுக்கு மீண்டும் புத்துயிரூட்டும் திட்டத்துக்கு அனுமதி அளிக்குமாறு டோங் ஜோங் அண்மைய காலமாக அரசாங்கத்தின் மீது தீவிர நெருக்குதல் அளித்து வருகிறது.
பாகாங்கில் இப்போது சுயேச்சை சீன உயர் நிலைப் பள்ளிக் கூடம் ஏதும் இல்லாததால் அதில் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் கிளந்தான் போன்ற அண்டை மாநிலங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது.
அந்த சுயேச்சை பள்ளிக்கூடங்கள் வழங்கும் சான்றிதழ்களை மலேசிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. காரணம் தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக மண்டரின் மொழியை அவை போதானா மொழியாகக் கொண்டுள்ளன.
என்றாலும் டோங் ஜோங்கின் கோரிக்கைகளுக்கு கூட்டரசு அரசாங்கம் சிறிது சிறிதாக இணங்கி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
பிரிட்டிஷ் ஏ நிலைத் தேர்ச்சிக்கு சமமான United Education Certificate சான்றிதழை வைத்துள்ளவர்களை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் அனுமதிப்பதற்கு 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமைச்சரவை ஒப்புக் கொண்டது.
இதனிடையே நடப்பு நிலையை மறுபரீசிலினை செய்யப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்திருந்த கல்வி அமைச்சர் முஹைடின் யாசின் நேற்று தமது நிலையை மாற்றிக் கொண்டு சுயேச்சை சீன உயர் நிலைப் பள்ளிகள் தொடர்பில் மசீச-விடமிருந்து அதிகமான யோசனைகளை தாம் செவிமடுக்கப் போவதாகக் கூறியுள்ளார்.