கொடுமை எனக் குமுறவைக்கும் கமுந்திங் ‘சித்திரவதைக் குறிப்புகள்’

கமுந்திங் தடுப்புமுகாமிலிருந்து கடத்திவரப்பட்ட சில ‘சித்திரவதைக் குறிப்புகள்’ நம் அதிகாரிகளின் விசாரணை முறைகள் குறித்து பல கேள்விகளை எழுப்புகின்றன.

அந்தத் தடுப்புமுகாமிலிருந்து கடத்திக்கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்டு மலேசியாகினியிடம் ஒப்படைக்கப்பட்ட குறிப்புகள், அங்கு உள்ள 45 கைதிகள் அனுபவித்த குவாண்டானாமோ-பாணி ‘சித்திரவதைகள்’ பற்றித் தெளிவாகவே விவரிக்கின்றன.

அவற்றில் தேதிகள் குறிப்பிடப்படவில்லை.ஆனால், கமுந்திங்குக்கு மாற்றப்படும் முன்னர் விசாரணைக்கு வைக்கப்பட்ட இடத்தில் நடந்த விசாரணைமுறைகள் பற்றி அவை குறிப்பிடுகின்றன.

அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள விசயங்களைத் தனியே உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை.அவற்றின் உள்ளடக்கம் வருமாறு:

உடையெல்லாம் களையப்பட்டு உள்சில்வாருடன் ஒரு ‘இயந்திரத்தில்’ தலைகீழாக தொங்க விடப்பட்டது.அந்த இயந்திரம் அறையைச் சுற்றிச் சுற்றி வரும். இந்தச் சித்திரவதை அறை புக்கிட் அமானில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. திடீரென்று இயந்திரம் சுற்றுவது நிற்கும்.உடனே(கைதியின்)உடலில் கூர்மையற்ற (கைத்தடி போன்ற)பொருளால் திரும்பத் திரும்ப அடி விழும்.அடி நின்றதும் இயந்திரம் மீண்டும் சுழலும்.பின் மறுபடியும் அடிவிழும்.பின்னர் இயந்திரம் நிறுத்தப்படும்.அது நின்றதும் (கைதி) கடுமையாக அடிக்கப்படுவார்.

-பிறப்புறுப்புகளில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றப்படும்.

-உடலில் உள்ள மயிர்கள் பிடுங்கப்படும்.

-மிளகாய் சாந்து உடலில், குறிப்பாக பிறப்புறுப்புகளில் பூசப்பட்டு இரண்டு மூன்று நாள்களுக்கு அப்படியே விட்டுவைக்கப்படும்.

-பிறப்புறுப்புகளில் சிகரெட்டால் சுடுவார்கள்.

-நிர்வாணமாக பலமணி நேரத்துக்கு உக்கி போட வேண்டியிருக்கும்,இது 60 நாள்கள் தொடரும்.

இப்படிப்பட்ட தகவல்கள் அந்தக் குறிப்புகளில் இருந்தன. அண்மையில், கைதிகளின் உண்ணாவிரதம் பற்றி அறிவதற்காக அந்த முகாமுக்குச் சென்றிருந்த மனித உரிமை ஆணைய(சுஹாகாம்)க் குழு ஒன்றிடமும் இதே போன்ற குறிப்புகள் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அதை உறுதிப்படுத்திய ஆணையர் முகம்மட் ஷா’அனி அப்துல்லா,  ஆணையம் அவற்றை “விவாதித்து” வருவதாகத் தெரிவித்தார்.

“அதன்பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றித் தீர்மானிப்போம்”, என்றாரவர்.

போலீஸ் பேச்சாளர் ரம்லி யூசுப்புடன் தொடர்புகொண்டபோது அதை மேலதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசென்றுவிட்டு பிறகு தகவல் அளிப்பதாகக் கூறினார்.

கெராக்கான் மன்சோ ஐஎஸ்ஏ (Gerakan Mansuh ISA) தலைவர் சைட் இப்ராகிம் சைட் நோ-வும் அக்குறிப்புகளைப் பார்த்திருக்கிறார். அவை கைதிகளிடமிருந்து வந்தவைதாம் என்றவர் உறுதிப்படுத்தினார்.

“திட்டவட்டமாக அவர்களிடமிருந்து வந்தவைதாம்”, என்றார்.

பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள், அவர்களின் கைதிஎண்கள் முதலியவையும் குறிப்புகளில் உள்ளன.கைதிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு மலேசியாகினி  அவற்றை வெளியிட விரும்பவில்லை.

வழக்குரைஞர் பாடியா நட்வா பிக்ரி, குறிப்புகளில் இடம்பெற்றுள்ள பெயர்களைக் கொண்டவர்கள் இன்னமும் தடுப்புக்கைதிகளாக உள்ளனர் என்பதை ஐஎஸ்ஏ கைதிகள் உறுதிப்படுத்தி இருப்பதாகக் கூறினார்.

அவருடைய கட்சிக்காரர்களின் பெயர்கள் அக்குறிப்புகளில் இல்லை.

ஆனால், புக்கிட் அமானில் 60நாள் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில் அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்காக “மோசமாக நடத்தப்பட்டதாக”அவர்கள் கூறியிருக்கிறார்கள் என்றாரவர்.

கடந்த மாதல் உள்துறை அமைச்சின் அதிகாரிகளுடன் அந்த முகாம் சென்ற சுஹாகாம் ஆணையர் ஜேம்ஸ் நாயகம், அங்குள்ள தடுப்புக்கைதிகள் பலவகைப்பட்டவர்கள் என்றார். ஆள்கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள், ஜிம்மா இஸ்லாமியா, டாருல் இஸ்லாம், ஜிம்மா சண்ட்ரி மலாயு(Jemaah Islamiah, Darul Islam and Jemaah Santri Melayu) போன்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், போலி ஆவணங்களைத் தயாரித்தவர்கள் முதலியோர் அங்கிருப்பதாக அவர் சொன்னார்.