பணத்தை வெள்ளையாக்கியதாக சம்சுபாஹ்ரெய்ன் மீது 17 குற்றச்சாட்டுக்கள்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட ஆலோசகர் சம்சுபாஹ்ரெய்ன் இஸ்மாயில் மீது மொத்தம் 4.14 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட பணத்தை வெள்ளையாக்கியதாக மேலும் 17 குற்றச்சாட்டுக்கள் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று சுமத்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே என்எப்சி-யின் முகமட் சாலே இஸ்மாயிலை ஏமாற்றியதாக சம்சுபாஹ்ரெய்ன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்து விசாரணை கோரினார்.

வழக்குரைஞர்களான கமாருல் ஹிஷாம் கமாருதீனும் அபிபுடின் ஹபிபியும் சம்சுபாஹ்ரெய்னை இந்த வழக்கில் பிரதிநிதித்தனர்.

அரசுத் தரப்புக்கு கறுப்புப் பணம் வெள்ளையாக்கப்படுவற்கு எதிரான சட்டத்துறைத் தலைவர் அலுவகத்தில் உள்ள பிரிவின் தலைவர் அன்செல்ம் பெர்ணாண்டிஸ் தலைமை ஏற்றுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 25க்கும் டிசம்பர் 9க்கும் இடையில் பல்வேறு காசோலைகளையும் ரொக்கத்தையும் பயன்படுத்தியும் பல்வேறு பொருளகங்களிலிருந்து மாற்றியதின் மூலமும் தமது மற்றும் தமது மனைவி பெயரில் உள்ள வங்கிக் கணக்குகளில் பணத்தை வெள்ளையாக்கியதாக சம்சுபாஹ்ரெய்ன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதில் ஒரே ஒரு பரிவர்த்தனையில் மட்டுமே என்எப்சி சம்பந்தப்பட்டுள்ளது.

செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி கோமதி சுப்பையா ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் 30,000 ரிங்கிட்  ஜாமீனை அனுமதித்தார். அந்த வழக்கு ஜுன் 29ம் தேதி மீண்டும் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.