ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியை எதிர்கொள்வதற்கு பின்பற்றப்பட்ட போலீஸ் நடைமுறைகளை கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் முகமட் சாலே, அரசாங்கம் அமைத்துள்ள சுயேச்சைக் குழுவிடம் விளக்கியுள்ளார்.
‘கூடின பட்சக் கட்டுப்பாட்டுடன்’ நடந்து கொள்ளுமாறு போலீசாருக்கு ஆணையிடப்பட்டிருந்தது என அவர் முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் ஹனீப் ஒமார் தலைமையிலான அந்தக் குழுவிடம் கூறினார்.
மாநகரச் சாலைகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாகச் செல்வது தடுக்கப்படவில்லை. ஏனெனில் டாத்தாரான் மெர்தேக்காவையும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கும் நீதிமன்ற உத்தரவை நிலை நிறுத்தும் கடமை மட்டுமே போலீசாருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது..
“உங்களுக்கு வரம்பு தெரிவதை போலீசார் உறுதி செய்தனர். அவர்கள் தடுப்புக்களை அமைத்தனர். மூன்று வரிசைகளாக தடுப்புக்கள் போடப்பட்டன. ஆகவே நீங்கள் அவற்றைத் தாண்டினால் நீங்கள் அவற்றைக் கடக்க முயலுவதாகவே கருதப்படும்,” என புத்ராஜெயாவில் நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் ஹனீப் நிருபர்களிடம் கூறினார்.
நீதிமன்றம் ஆணையிட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்கு 50 மீட்டர் தொலைவில் தடுப்புக்கள் அமைக்கப்பட்டதற்கு அமைதியாக ஒன்று கூடும் சட்டம் அவ்வாறு கூறுவதே காரணம் என ஹனீப் மேலும் விளக்கினார்.
குந்தியிருப்பு போராட்டத்தைக் கலைப்பதற்கு முதலில் பத்து நிமிட இடைவெளியில் மூன்று எச்சரிக்கைகளை விடுக்குமாறு கலகத் தடுப்புப் போலீசாருக்கு ஆணையிடப்பட்டிருந்தது என்றும் அவர் சொன்னார்.
“ஆனால் சூழ்நிலை மாறுமானால் என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்யுமாறும் அது கூறியது,” என மேல் விவரம் தராமல் ஹனீப் குறிப்பிட்டார்.
டாத்தாரான் மெர்தேக்காவிலிருந்து தொலைவில் உள்ள பகுதிகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டுமாறு உத்தரவிடப்பட்டிருந்ததா என வினவப்பட்ட போது அது சீரான நடவடிக்கை நடைமுறைகளில் (SOP) இல்லை என்றும் எதிர்கால விசாரணைகளில் களத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகளிடம் அது பற்றிக் கேட்கப்படும் என அவர் சொன்னார்.
தேர்தல் சீர்திருத்தங்களுக்கு போராடும் அந்தப் பேரணியை எதிர்கொள்வதற்கு தீவகற்ப மலேசியா முழுவதையும் சேர்ந்த 8,000 போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டதாக முகமட்டை மேற்கோள் காட்டி ஹனீப் தெரிவித்தார்.
அந்தப் பேரணிக்கு முன்னதாக கோலாலம்பூரில் உள்ள போலீஸ் பயிற்சி நிலையத்தில் சீரான நடவடிக்கை நடைமுறைகள் குறித்து நேரடியாக முகமட் விளக்கமளித்தார்.
“சீரான நடவடிக்கை நடைமுறைகள் ஐநா தரங்களுக்கும் சட்டத்திற்கும் ஏற்ப இருப்பதை காண நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்,” என கூறிய ஹனீப், ஊடகங்கள் பாதுகாப்பு மீதான மெடலின் பிரகடனம் அதில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியுமாறு முகமட்டுக்கு பணிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இன்று சன் ஆசிரியர் ஆர் நடேஸ்வரனும் முன்னாள் கோலாலம்பூர் சிஐடி தலைவர் மாட் ஜைன் இப்ராஹிமும் சாட்சியமளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் மாட் ஜைன் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதால் அங்கு வரவில்லை.
அந்தக் குழுவில் இருந்த இரண்டு உறுப்பினர்கள் விலகிக் கொண்டு விட்டதால் ஏற்பட்ட காலி இடங்களில் ஒன்றை முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி நிக் ஹஷிம் நிக் அப்துல் ரஹ்மான் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சு இன்னொரு இடத்தை நிரப்ப முயலுவதாகவும் ஹனீப் தெரிவித்தார்.