2ஜி ஸ்பெக்ட்ரம் : அஸ்ட்ரோவின் ரேல்ப் மார்செல் விசாரிக்கப்பட்டார்

கடந்த திங்கள்கிழமை மேக்சிஸ் பெர்ஹாட்டின் உயர்மட்ட அதிகாரியை இந்தியாவின் சிபிஐ தொலைபேசித்துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரித்தது.

சன் டிவியில் முதலீடு செய்துள்ள அஸ்ட்ரோவின் தலைமை செயல்முறை அதிகாரியும் மேக்சிஸ் வாரியத்தின் உறுப்பினருமான ரேல்ப் மார்ஷல்  ஏர்செல் நிறுவனத்தை எடுத்துக்கொள்வதற்கு அமைச்சர் சலுகை காட்டியதாகவும் அதற்கு கைமாறாக மாறன் கும்பத்தினருக்குச் சொந்தமான சன் டிவியில் முதலீடு செய்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி சிபிஐ அதிகாரிகளால்    விசாரிக்கப்பட்டார்.

இவ்விவகாரம் குறித்து தயாநிதி விரைவில் விசாரிக்கப்படலாம் என்று சிபிஐ வட்டாரம் கூறியதாக பிடிஐ செய்தி கூறிற்று.

சமீபத்தில் சிபிஐ இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அதன் நிலவர அறிக்கையில் ஏர்செல் நிறுவனத்தினருக்கு அளிக்க வேண்டிய நோக்கக் கடிதத்தை தயாநிதி “வேண்டுமென்றே தாமதப்படுத்தியாக” தெரிவித்துள்ளது.

மேக்சிஸ் குழுமத்திற்கு ஏர்செல் விற்கப்பட்ட பின்னர் அந்த மலேசிய நிறுவனம் மாறன் குடும்ப நிறுவனங்களில் முதலீடு செய்தது என்று சிபிஐ கூறுகிறது.

அந்த அமைச்சரின் உத்தரவுப்படிதான் ஏர்செல் முதன்மை உரிமையாளர் சி. சிவசங்கரனின் ஆவணங்கள் பரிசீலிக்கப்படுவதில் தாமதம் செய்யப்பட்டது என்று தயாநிதியின் முன்னாள் உதவியாளர்கள் சிபிஐயிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

2005 மற்றும் 2006 ஆண்டுகளில் தொலைபேசித்துறை அமைச்சருடன் மார்ஷல் பல சந்திப்புகளை நடத்தியுள்ளார் என்று அவர்கள் கூறியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2006 ஆம் ஆண்டில் தயாநிதி அமைச்சராக இருந்தபோது உரிமத்திற்காக தாம் செய்துகொண்ட மனு நிராகரிக்கப்பட்டதோடு தமது நிறுவனத்தை மேக்சிஸ்க்கு விற்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாக சிவசங்கரன் குற்றம் சாட்டினார். மேக்சிஸ்சின் உரிமையாளர், தயாநிதிக்கும், சன் டிவியின் உரிமையாளரான அவரது சகோதரர் கலாநிதிக்கும் மிக நெருக்கமானவர் என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னர், தொலைபேசித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் தயாநிதி 14 உரிமங்களை டிஸ்நெட் வையர்லெஸ்(ஏர்செல்)க்கு வழங்கியுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், அக்குற்றச்சாட்டுகளை தயாநிதி மறுத்துள்ளார்.

அஸ்ட்ரோ குழுமத்தின் மூலம் மேக்சிஸ் சன் டிவியில் செய்துள்ள முதலீடுகள் குறித்தும் சிபிஐ விசாரிக்கும் என்றும் பிடிஐ கூறியுள்ளது.

மேலும், மேக்சிஸ் குழுமம் ஏர்செல் நிறுவனத்தை எடுத்துக்கொண்டது சம்பந்தப்பட்ட பல்வேறு அம்சங்கள் மீதும் சிபிஐ கவனம் செலுத்துவதாக அந்த வட்டாரம் கூறியது.

2001-2007 ஆம் ஆண்டுகளுக்கிடையில் வெளியிடப்பட்ட 2ஜி ஒதுக்கீடுகள் குறித்து சிபிஐ தொடக்க நிலை விசாரணையைப் பதிவு செய்துவிட்டது.

ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் 74 விழுக்காடு பங்குகளைக் கொண்டுள்ளது.

-பெர்னாமா