ISA சித்திரவதை: அரசு மருத்துவர் அறிவார்

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட கைதிகள்,போலீஸ் விசாரணையில் சித்திரவதைக்கு உள்ளானபோது  தங்கள் காயங்களுக்கு மருந்திட்ட அரசாங்க மருத்துவர்தான் தங்களின் முக்கிய சாட்சி என்கிறார்கள்.

அம்மருத்துவர், கைதிகள் பேராக்கில் தைப்பிங் தடுப்புமுகாமுக்கு அனுப்பப்படுமுன்னர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு ஒவ்வொரு வாரமும் சென்று அவர்களின் காயங்களுக்குச் சிகிச்சை அளிப்பது வழக்கம் என்று மலேசியாகினிக்கு வழங்கப்பட்ட குறிப்புகளிலிருந்து தெரிகிறது.

மருத்துவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால், அதைத் தெரிவிக்குமுன்னர் மலேசியாகினி அதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறது.அவர், ஒரு கைதி “கடுமையாக”த் தாக்கப்பட்ட வேளையில் அவர் சார்பாக தலையிட்டதாகவும் கூறப்படுகிறது.

“அவர் (மருத்துவர்) முக்கியமானவர். பணி ஓய்வு பெற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.ஆனால், அவர் அரசு மருத்துவமனையில் பணி புரிந்து வந்தார்…..மற்றவர்களைவிட அவருக்குத்தான் நிறைய இரகசியங்கள் தெரியும்”, என்று, கமுந்திங் முகாமிலிருந்து அங்குள்ள பணியாளர்களால் கடத்திவரப்பட்டதாகக் கூறப்படும் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனையில் விசாரித்ததில்,பணி ஓய்வு வயதைத் தாண்டிவிட்ட அம்மருத்துவர் குறிப்பிட்ட மருத்துவ பிரிவில் இப்போது பணிபுரியவில்லை என்பது தெரிந்தது.

அவர் வோறொரு பிரிவுக்கு மாற்றப்பட்டாரா அல்லது பணி ஓய்வு பெற்றுவிட்டாரா என்பது தெளிவாகத் தெரிவில்லை.

மலேசியாகினி அம்மருத்துவராக இருக்கலாம் என்ற நம்பிக்கையில் ஒருவருடன் மின்னஞ்சல் வழியும் சமூக ஊடகம் வழியாகவும் தொடர்புகொண்டுள்ளது.ஆனால், அவரிடமிருந்து இதுவரை பதில் இல்லை.

மருத்துவ உதவியாளர் ஒருவருக்கும் சித்திரவதைகள் பற்றித் தெரியும் என அக்குறிப்புகள் கூறுகின்றன.

சித்திரவதை செய்யப்பட்டபோது ஏற்பட்ட காயங்கள் பற்றிய ஆவணங்கள் கோலாலம்பூரிலும் பேராக்கிலும் உள்ள பல மருத்துவமனைகளில் கிடைக்கலாம் என்றும் அவை தெரிவித்தன. அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளான கைதிகளுக்கு மனநோய் மையங்களிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதால் அங்கும்கூட அவை தொடர்பான தகவல்கள் கிடைக்கலாம்.

‘நேரடித் தகவல் இல்லை’

அக்குறிப்புகள் பற்றி நன்கு அறிந்தவரான Gerakan Mansuh ISA (ஜிஎம்ஐ) தலைவர் சைட் இப்ராகிம் சைட் நோ, “சில காலமாகவே” அந்த மருத்துவரின் பெயர் குறிப்பிட்டப்பட்டு வந்திருப்பதை அறிந்தே உள்ளார்.

ஆனால், அம்மருத்துவர் இதுவரை ஜிஎம்ஐ-யைத் தொடர்புகொண்டதில்லை.

“நடப்பது சட்டத்துக்குப் புறம்பானது என்று சொல்ல முகாம் அதிகாரிகளோ, மருத்துவ அதிகாரிகளோ இதுவரை முன்வந்ததில்லை. நமக்குத் தகவல்கள் பெரும்பாலும் கைதிகளின் குடும்பத்தினரிடமிருந்தும் வழக்குரைஞர்களிடமிருந்தும்தான் கிடைக்கின்றன”, என்று சைட் இப்ராகிம்(வலம்) கூறினார்.

“அவர்கள்( முகாம் மற்றும் மருத்துவ அதிகாரிகள்) மெளனமாக இருக்கிறார்கள்.பெயரைக் குறிப்பிடாமலேயேதகவல்களை அவர்கள் தெரிவிக்கலாம்”.

மனித உரிமை ஆணையமும் அக்குறிப்புகள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.ஆனால், அவற்றின் உள்ளடக்கத்தை உறுதிப்படுத்திக்கொள்ள அதனால் முடியாதிருக்கிறது.