சிலாங்கூர் எம்பி அவரின் அரசியல் செயலாளரைத் தற்காத்துப் பேசுகிறார்

தம் அரசியல் செயலாளர் ஃபாகா ஹுசினை மாசுபடுத்தும் இயக்கத்தைக் கண்டித்த சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம், “சில நேரங்களில் உண்மை உறுத்தும்” என்றார்.

“அரசியலில் ஃபாகா முரட்டுத்தனமாக நடந்துகொள்வதாக சிலர் கருதுகிறார்கள்.அவர் உண்மைகளை எடுத்துரைப்பதன்வழி எனக்கும் மாநிலத்துக்கும் பக்காத்தானுக்கும் தம் கடமையைச் சரிவர செய்து வருகிறார்.ஆனால், உண்மை சில நேரங்களில் உறுத்துகிறது.

“ஃபாகா வெளிப்படையாக பேசுவது சிலருக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். ஆனால், அது நம் கொள்கைக்கு ஏற்புடையதே”, என்று காலிட் நேற்று  நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தபோது மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

Kami Sayangkan PKR’ (நாங்கள் பிகேஆரை விரும்புகிறோம்) என்ற அணியினர்  இணையத்தில் மேற்கொண்டிருக்கும் இயக்கத்தில், மந்திரி புசாரின் அரசியல் செயலாளரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிகேஆர் துணைத் தலைவர், அஸ்மின் அலியும் ஃபாகாவுக்கு எதிராக பல புகார்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

கட்சிக்குள் நிலவும் இச்சச்சரவு பற்றி மலேசியாகினி கடந்த வாரம் அறிவித்திருந்தது. அவ்விவகாரம் பற்றி அறிந்தவர்கள், “அதிருப்தியுற்ற”சிலர்தான் அவர்மீது புகார்கள் தெரிவித்து வருகிறார்கள் என்றனர். அவர்கள் காலிட்டை நெருங்கவிடாமல் ஃபாகா தடுத்து விடுகிறார் என்பதுதான் அவர்களின் மனக்குறைக்குக் காரணம்.

‘ஃபாகா திறமையானவர்’

ஃபாகா அரசியல் செயலாளர் என்ற முறையில் திறம்பட பணியாற்றி வருவதாக காலிட் பாராட்டினார்.

“வழக்குரைஞரான  அவர் திறமையானவர்.நில விவகாரங்களை எல்லாம் திறமையாகக் கவனித்துக்கொள்கிறார்”, என்றாரவர்.

ஃபாகாவுக்கு எதிரான இயக்கம், அவரைப் பதவி இறக்குவதை நோக்கமாகக் கொண்டதா என்று வினவியதற்கு, “அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை.உங்களுக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதா செய்துகொண்டிருக்க வேண்டியதுதான்.உங்கள் வேலையை நீங்கள் தொடர்ந்து செய்துகொண்டிருந்தால் இந்த இரைச்சல் எல்லாம் குறைந்து போகும்” என்று காலிட் கூறினார்.

தம்மைப் பொருத்தவரை தம் அரசியல் செயலாளர் மீது திருப்தி கொண்டிருப்பதாகக் கூறினார்.