உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக சில குறிப்புகளில் கூறப்பட்டிருப்பதை போலீசார் அடியோடு மறுக்கிறார்கள்.
தடுப்புக்காவலில் இருப்போர் சித்திரவதைக்கு ஆளானதாக புகார் எதுவும் செய்ததில்லை; அவர்களிடம் வாரந்தோறும் மருத்துவசோதனை நடத்தும் கோலாலம்பூர் மருத்துவமனை மருத்துவர்களும் அவர்களின் உடலில் காயங்களைக் கண்டதாக புகார் செய்ததில்லை என்று போலீஸ் பேச்சாளர் ரம்லி யூசுப் இன்று தெரிவித்தார்.
“தடுப்புக்கைதிகள் போலீஸ் சிறப்புப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தபோது சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்று கூறப்படுவதற்கு ஆதாரம் ஏதுமில்லை என்றும் போலீஸ் மற்றும் சிறப்புப் பிரிவுக்குள்ள நற்தோற்றத்தையும் புகழையும் கெடுப்பதற்காக அவ்வாறு சொல்லப்ப்ட்டிருக்கிறது என்றும் நம்புகிறோம்.
“தடுப்புக்காவலில் இருப்போர் பொதுமக்களின் கவனத்தையும் இரக்கத்தையும் பெறுவதற்காகவும் அப்படிப் பெற்றால் விரைவில் விடுவிக்கப்படலாம் என்ற நம்பிக்கையிலும் அவ்வாறு செய்திருக்கலாம்”, என்று ரம்லி தெரிவித்தார்.
தாங்கள் சொல்வது உண்மை என்று தடுப்புக்காவல் கைதிகள் வலியுறுத்துவார்களானால் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரங்களைக் காண்பிக்க வேண்டும் என்றாரவர்.
தைப்பிங் கமுந்திங் தடுப்புமுகாமில் வைக்கப்பட்டுள்ளவர்கள் பல்வகை சித்திரவதைகளுக்கு ஆளான செய்திகளை மலேசியாகினி திங்கள்கிழமை வெளியிட்டிருந்தது.அந்த முகாமிலிருந்து கடத்திக்கொண்டுவரப்பட்ட சில குறிப்புகளின் வழியே சித்திரவதை பற்றிய தகவல்களை அறிந்துகொண்டதாக அது குறிப்பிட்டிருந்தது.
கைதிகளின் பெயர்கள், கைதிஎண்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்த அக்குறிப்புகள் தடுப்புமுகாமுக்கு அனுப்பப்படுமுன்னர் 60நாள்களுக்கு விசாரணைக்காக வைக்கப்படும் இடத்தில் கைதிகளுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் விரிவாக விளக்கியிருந்தன.
“வாரந்தோறும் ஒவ்வொரு கைதியையும் கோலாலம்பூர் மருத்துவமனையச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சோதனை செய்வார்.அவர்கள் நோயுற்றிருந்தால், காயமடைந்திருந்தால் அதற்கான சிகிச்சை அளிக்கப்படும்.மருத்துவர்கள் அதைப் பதிவு செய்தும் வைப்பார்கள்.
“சொல்லப்போனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் பொருத்தமான உணவு கொடுக்க வேண்டும் என்றெல்லாம் மருத்துவர் எச்சரித்துவிட்டுச் செல்வார்….அவர்கள் உடலில் காயங்களைக் கண்டதாகவோ அவர்கள் சரியாக நடத்தப்படவில்லை என்றோ இதுவரை புகார் எதுவுமில்லை”, என்றார் ரம்லி.
தடுப்புக் கைதிகள் அலோசனை வாரியத்திடமும் புகார் செய்யலாம், முறையீடு செய்யலாம்.
“அந்த வாரியத்திடம் கைதிகள் தங்கள்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டு வாக்குமூலங்கள்தான் கொடுத்துள்ளனரே தவிர கொடுமைகளுக்கு ஆளானதாக எவரும் புகார் செய்ததில்லை”.
ஐஎஸ்ஏ-இன்கீழ் மொத்தம் 45 பேர் இன்னமும் தடுப்புமுகாமில் உள்ளனர்.
ஆள்கடத்தல், பயங்கரவாதம், போலி ஆவணங்கள் தயாரித்தல் முதலிய குற்றங்களுக்காக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.