சிலாங்கூர் பிஎன் தேர்தல் வியூகங்களை வகுக்கக் கூடுகிறது

சிலாங்கூர் பிஎன் தனது தேர்தல் எந்திரத்தை வரும் சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக முடுக்கி விடுகிறது. அதனை ஒட்டி பக்காத்தான் ராக்யாட்டிடமிருந்து மாநிலத்தைக் கைப்பற்றுவதற்கான வியூகங்களை விவாதிக்க அன்றைய தினம் மாநாடு ஒன்று நடத்தப்படும்.

சிலாங்கூர் மாநிலத்தைத் தேர்தலுக்கு ஆயத்த நிலையில் வைப்பது அதன் நோக்கம் என்று ஷா அலாமில் உள்ள சிலாங்கூர் மாநில அம்னோ தலைமையகத்தில் மாநில அம்னோ செயலாளருமான முகமட் ஜின் முகமட் நிருபர்களிடம் கூறினார்.

பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது அதன் அர்த்தமா என்று அவரிடம் வினவப்பட்டது. அதற்கு புன்னகையுடன் பதில் அளித்த முகமட் ஜின், ” எனக்குத் தெரியாது. நீங்கள் பிரதமரைக் கேட்க வேண்டும். மாநாட்டை நடத்துமாறு எனக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது”, என்றார் அவர்.

அந்த நிகழ்வை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தொடக்கி வைப்பார். மாநாடு ஷா அலாமில் உள்ள சுல்தான் சலாஹுடின் அப்துல் அஜிஸ் ஷா பல தொழில் கல்லூரியில் காலை எட்டு மணித் தொடக்கம் மாலை 4 மணி வரை நடைபெறும்.

நஜிப் சிலாங்கூர் மாநில அம்னோ தொடர்புக் குழுத் தலைவரும் ஆவார்.

வாக்களிப்பு மாவட்டங்கள், நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகள் வரை அனைத்து நிலைகளிலும் உள்ள பிஎன் கிளைகளை ஒருங்கிணைப்பதும் அந்த மாநாட்டின் நோக்கம் என்றும் முகமட் ஜின் சொன்னார்.

மொத்தம் 2,114 பேராளர்களும் 900 பார்வையாளர்களும் செயலக உறுப்பினர்களும் அந்த மாநாட்டில் பங்கு கொள்கின்றனர்.

புதிய கருப்பொருள்

அந்த மாநாட்டுக்கான கருப்பொருள் “சிலாங்கூரை நேசியுங்கள், பிஎன்-னை நம்புங்கள்” என்பதாகும்.  இவ்வாண்டு நாங்கள் “பிஎன் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்” என்ற கருப்பொருளை  கைவிட்டு விட்டோம். ஏனெனில் “எல்லோரும் மாறி விட்டார்கள்,” என அவர் புன்முறுவலுடன் கூறினார்.

“அந்த மாநாட்டு உத்வேகத்தைக் கொடுக்கும் என நாங்கள் நம்புகிறோம். பிஎன் சிலாங்கூருக்குத் தலைமை ஏற்றுள்ள பிரதமரின் கீழ் ஒரே பிஎன் குடும்பமாக நாங்கள் வேலை செய்வதற்கு வேகத்தையும் வலிமையையும் அது கொடுக்கும் என்றும் நாங்கள் கருதுகிறோம்.”

மாநாட்டுக்கு பின்னர் மாலை நான்கு மணிக்கு சிலாங்கூர் பிஎன் ஏற்பாடு செய்துள்ள நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர், தமது துணைவியார் ரோஸ்மா மான்சோருடன் கலந்து கொள்வார். ஷா அலாம் செக்சன் 7ல் உள்ள ஐ சிட்டியில் அந்த உபசரிப்பு நடத்தப்படுகிறது.

TAGS: