இசா சித்தரவதைகள் ‘கடந்த 10 ஆண்டுகளாக தொடருகின்றன’

இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட கைதிகள் அனுபவித்துள்ள கொடுமை எனக் குமுற வைக்கும் சித்தரவதைகள் என புதிதாக கூறப்பட்டுள்ள விஷயங்கள் கடந்த 10 ஆண்டுகளில் கூறப்பட்ட புகார்களைப் பிரதிபலிப்பதாக இசா எதிர்ப்புப் போராளிகள் கூறிக் கொண்டுள்ளனர்.

செக்ஸ் ரீதியிலான மருட்டல் உட்பட பல வகையான சித்தரவதைகளை பல முன்னாள் இசா கைதிகள் நினைவு கூர்ந்துள்ளதாக ஜிஎம்ஐ எனப்படும் இசா எதிர்ப்பு இயக்கத் தலைவர் சையட் இப்ராஹிம் சையட் நோ கூறுகிறார்.

“தாங்கள் நிர்வாணமாக தலைகீழாகத் தொங்க விடப்பட்டது, குதப்புணர்ச்சி மருட்டல் போன்றவற்றுக்கு இலக்காகி இருப்பதாக சிலர் கூறிக் கொண்டுள்ளனர். அது முன்பும் நிகழ்ந்துள்ளது. அத்தகைய விசாரணை முறைகளும் சித்தரவதை முறைகளும் புதியவை அல்ல,” என தொடர்பு கொள்ளப்பட்ட போது அவர் சொன்னார்.

பேராக் கமுந்திங் தடுப்பு முகாமிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் குறிப்புக்கள் பற்றி அவர் கருத்துரைத்தார்.

அவரது கருத்தை மனித உரிமைப் போராட்ட வழக்குரைஞர் எட்மண்ட் போன்-னும் ஒப்புக் கொண்டார். இது போன்ற சித்தரவதைகளுக்கும் தாங்கள் இலக்காகி இருப்பதாக தம்முடம் பணியாற்றியுள்ள முன்னாள் கைதிகளும் தெரிவித்துள்ளதாக அவர் சொன்னார்.

அந்தக் கைதிகளில் 2001ம் ஆண்டு தடுத்து வைக்கப்பட்ட ரிபார்மசி கைதிகளும்  ஜெம்மா இஸ்லாமியா இயக்கத்துடன் தொடர்புடையவர்களும் அடங்குவர்.

“ஆனால் எந்திரம் ஒன்றில் கைதி தலைகீழாக தொங்க விடப்படுவதாக கூறப்படுவது புதிய தகவலாகும். நான் அது பற்றிக் கேள்விப்படவே இல்லை,” என்றார் போன்.

“கைதி ஒருவர் உடையெல்லாம் களையப்பட்டு உள்சில்வாருடன் ஒரு ‘இயந்திரத்தில்’ தலைகீழாக தொங்க விடப்படுவார்.அந்த இயந்திரம் அறையைச் சுற்றிச் சுற்றி வரும். இயந்திரம் சுற்றுவது நிற்கும் போது  (கைதியின்) உடலில் கூர்மையற்ற (கைத்தடி போன்ற) பொருளால் அடி விழும் ” என அந்தக் குறிப்புக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

2004ம் ஆண்டில் தங்களது அனுபவத்தை விவரமாகத் தெரிவிக்கும் குறிப்புக்களை கைதிகள் வெளியில் கடத்தியுள்ளனர் என்றும் அவற்றை  HRW என்ற அனைத்துலக அரசு சாரா மனித உரிமை அமைப்பு விரிவாக ஆவணமாக்கியுள்ளது என்றும் போன் கூறினார்.

அந்த HRW அறிக்கை முன்னாள் கைதிகள் அவர்களுடைய குடும்பங்கள் ஆகியோருடன் நடத்தப்பட்ட பேட்டிகளை அடித்தளமாகக் கொண்டவை.

சித்தரவதைகள் தொடர்பான புதிய குற்றச்சாட்டுக்களைப் போலீசார் மறுத்துள்ளனர். அவை ‘ஆதாரமற்றவை, தீய நோக்கம் கொண்டவை என அவர்கள் கூறினர். தாங்கள் முன் கூட்டியே விடுவிக்கப்படுவதற்காக அனுதாபத்தையும் விளம்பரத்தையும் பெற கைதிகள் மேற்கொள்ளும் முயற்சி எனவும் போலீசார் வருணித்தனர்.

சித்தரவைதைகள் தொடர்பான கூற்றுக்களை விசாரிக்கப் போவதாக மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது.

இசா சட்டம் ரத்துச் செய்யப்பட்டு அதற்குப் பதில் 2012ம் ஆண்டுக்கான புதிய பாதுகாப்புக் குற்றங்கள் (பாதுகாப்பு நடவடிக்கைகள்) சட்டம் அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்டு விட்ட போதிலும் கமுந்திங் தடுப்பு முகாமில் இன்னும் 45 இசா கைதிகள் இருக்கின்றனர்.