பினாங்கு அம்னோ, அம்மாநிலத்தை பிஎன் திரும்பப் பெற முடியும் என்று நம்புகிறது.பங்காளிக்கட்சிகளான மசீசவும் கெராக்கானும் குறைந்தது எட்டு இடங்களில் வெல்ல முடிந்தால் ஒரு சிறிய பெரும்பான்மையில் அதைக் கைப்பற்ற முடியும் என்கிறார் பினாங்கு அம்னோ செயலாளர் அஸ்ஹார் இப்ராகிம்.
நான்காண்டுகளில் டிஏபி தலைமையிலான மாநில அரசில் பல பலவீனங்கள் இருப்பது தெரியவந்துள்ளதாக அவர் சொன்னார்.
பெனாகா சட்டமன்ற உறுப்பினரும் மாநிலச் சட்டமன்றத்தில் மாற்றரசுக் கட்சித் தலைவருமான அஸ்ஹார், 2008 தேர்தலில் பிஎன் படுமோசமாக தோல்வி கண்டது என்றார். அம்னோ 11 இடங்களை வென்ற வேளையில் அதன் கூட்டுக்கட்சிகள் படுவீழ்ச்சி கண்டன.
அம்னோ மகளிர் பகுதி ஒரு கணக்கெடுப்பைச் செய்திருப்பதாகவும் அதில் அம்னோ அதன் 11 இடங்களைத் தக்க வைத்துக்கொள்வதுடன் மேலும் இரண்டு, மூன்று இடங்களை வெல்லும் வாய்ப்பும் உள்ளது தெரிய வந்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
கெராக்கானும் மசீசவும், போட்டியிடும் எல்லா இடங்களையும் வெல்ல முடியாவிட்டாலும் தலைநிலத்தில் ஜாவி, மாச்சாங் புபோக் போன்ற இடங்களில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக நம்புகின்றன.
ஜாவி முன்பு மாநில மசீச மகளிர் தலைவி டான் செங் லியாங் வசம் இருந்தது. அவர் “நல்லவர், கடும் உழைப்பாளி” என்று அஸ்ஹார் வருணித்தார்.
மாச்சாங் புபோக், முன்பு கெராக்கான் ஆட்சிக்குழு உறுப்பினர் தோ கின் வூன் வசம் இருந்தது.இப்போது பிகேஆரின் டான் ஹொக் லியோங் அதன் சட்டமன்ற உறுப்பினர்.அவர் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
மாச்சாங் புபோக், அன்வார் இப்ராகிமின் நாடாளுமன்ற தொகுதியான பெர்மாத்தாங் பாவுக்குள் இருக்கிறது.ஆனாலும், அங்கு புக்கிட் மெர்தாஜாம் அம்னோ தலைவர் மூசா ஷேக் காடிரின் செல்வாக்கு மேலோங்கி வருவதாக அஸ்ஹார் குறிப்பிட்டார்.
அம்னோ, பிகேஆர் வசமுள்ள பத்து மாங், சுங்கை பக்காப் ஆகிய இடங்களில் கவனம் செலுத்தி வருகிறது.
பக்காத்தான் ரக்யாட்டில் குறிப்பாக பிகேஆரில் எல்லாமே ஒரே “குழப்பமாக” உள்ளது. பாஸிலும் அப்படித்தான்.அக்கட்சித் தலைவர்கள் விடுக்கும் அறிக்கை மக்களைக் குழப்புவதாக அஸ்ஹார் கூறினார்.
“ஒரு நேரம் இஸ்லாமிய அரசு என்கிறார்கள், இன்னொரு நேரத்தில் மக்கள் நலவளர்ச்சி அரசு என்கிறார்கள், பிறகு ஹுடுட் சட்டம் பற்றிப் பேசுகிறார்கள்.இதனால் மக்கள்(கிராமங்களில் உள்ளோர்) குழப்பமடைந்துள்ளனர்”.
அன்வார் காலவதி ஆன தலைவர்
பெர்மாத்தாங் பாவில் அன்வாருக்கு செல்வாக்கு இருப்பதாகக் கூறப்படுவதைப் புறம்தள்ளினார் அஸ்ஹார்.அவர் “காலாவதி ஆன தலைவர்” என்றார்.
முன்பு அன்வார் பேசுகிறார் என்றால் அதைக் கேட்பதற்கு 2,000-க்கு மேற்பட்டோர் கூடுவர்.இப்போது அவரின் தீவிர ஆதரவாளர்கள் 200-300பேர் வருகிறார்கள்.
கட்சிகள் என்று பார்க்கையில், பிகேஆரிலிருந்து வெளியேறிய மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கைதான் அதிகம் என்றும் அஸ்ஹார் குறிப்பிட்டார்-2008-இலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களுமாக 11பேர் அதிலிருந்து வெளியேறியுள்ளனர்.
“இதையெல்லாம் பார்க்கும்போது பிகேஆர் கடைகட்டுவதற்காகக் காத்திருக்கும் கட்சி என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியவர்களாக இருக்கிறோம்”, என்றவர் குத்தலாகக் குறிப்பிட்டார்.