இசா என்ற உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் ரத்துச் செய்யப்படும் எனப் பிரதமர் இன்றிரவு அறிவித்தார். அத்துடன் ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்கான முயற்சிகள் எனக் குறை கூறப்பட்டுள்ள பல சட்டங்கள் திருத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
நாளை மலேசியா தினத்தை ஒட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட உரையில் அவர் அந்த விவரங்களை வெளியிட்டார்.
அவர் அறிவித்த விவரங்கள்:
விசாரணையின்றி தடுத்து வைக்கப்படுவதற்கு அனுமதிக்கும் இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் ரத்துச் செய்யப்படும்.
மூன்று அவசரகாலச் சட்டங்களும் அகற்றப்படுகின்றன.
கூட்டரசு அரசியலமைப்பின் 10வது பிரிவை அங்கீகரிக்கும் வகையில் சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கான சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும். ஆனால் அவை சாலை ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக “கடுமையானதாக” இருக்கும்.
பத்திரிக்கைகள் ஆண்டுதோறும் அச்சு அனுமதிகளைப் புதுப்பிக்க வேண்டும் என்ற முறைக்குப் பதில் ஒரு தடவை மட்டும் அனுமதி வழங்கும் முறை நடப்புக்குக் கொண்டு வரப்படும்.
1933-ம் ஆண்டுக்கான வசிப்பிடக் கட்டுப்பாட்டுச் சட்டம், 1959-ம் ஆண்டுக்கான வெளியேற்றச் சட்டம் ஆகியவையும் ரத்துச் செய்யப்படுகின்றன.
“2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி நான் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்ட போது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் விரிவாக ஆய்வு செய்யப்படும் என வாக்குறுதி அளித்தேன். அதன் தொடர்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளான இன்று இசா சட்டம் ரத்துச் செய்யப்படும் என மகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொள்கிறேன்”, என்றார் நஜிப்.
“கீழறுப்பு நடவடிக்கைகளையும் பயங்கரவாத சதிகளையும் கிரிமினல் நடவடிக்கைகளையும் தடுக்கவும் பொது ஒழுங்கையும் பாதுகாப்பையும் உறுதி செய்யவும் பொருத்தமான இரண்டு புதிய சட்டங்கள் உருவாக்கப்படும்.”
“அவை கூட்டரசு அரசியலமைப்பின் 149வது பிரிவுக்கு ஏற்ப அதன் உணர்வு அடிப்படையில் அமைந்திருக்கும்.”
“கொள்கை அளவில் அந்தச் சட்டங்கள் நாடு மற்றும் மக்களுடைய அமைதி, ஐக்கியம் ஆகியவற்றைப் போற்றி பாதுகாக்கும் வகையில் அமைந்திருக்கும்.”
தடுப்பதை நோக்கமாகக் கொண்டு ஒருவரைத் தடுத்து வைப்பதற்கு வகை செய்யும் இசா சட்டம் மலாயா சுதந்திரம் பெற்றதும் அறிமுகம் செய்யப்பட்டது.
தொடக்கத்தில் அது கம்யூனிஸ்ட்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதனை அரசாங்கம் அரசியல் எதிரிகளை முடக்குவதற்கு அடிக்கடி பயன்படுத்தி வந்தது.
கடந்த காலத்தில் அந்தச் சட்டத்தின் கீழ் பல அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை இரண்டு ஆண்டுகள் வரையில் தடுத்து வைப்பதற்கு அந்தச் சட்டம் உள்துறை அமைச்சருக்கு அதிகாரம் வழங்குகிறது. அதனை காலவரம்பின்றி நீட்டிக்கவும் முடியும்.
“மலேசியா மாறியுள்ளது என்பதை உணர்ந்தும் மக்களுடைய நாடியையும் கவலையையும் அவாக்களையும் புரிந்து கொண்டு அரசாங்கம், கூட்டரசு அரசியலமைப்பின் 150வது பிரிவு, மூன்றாவது விதியின் கீழ் அந்த மூன்று அவசர காலப் பிரகடனங்களையும் அகற்றுவதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்பிக்கும்,” என்றும் நஜிப் தெரிவித்தார்.
அவசர காலப் பிரகடனங்கள் அகற்றப்படுவதைத் தொடர்ந்து இசா பாணியில் அமைந்துள்ள அவசர காலச் சட்டமும் காலவதியாகும்.
அந்தச் சட்டத்தின் கீழ் பிஎஸ்எம் அறுவர் ஜுலை மாதம் தடுத்து வைக்கப்பட்டிருந்ததைத் தவிர இப்போது அவசரகால சட்டத்தின் கீழ் 6,000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வெளியீட்டு அனுமதிகள் தொடர்ந்து இருக்கும். ஆனால் அவற்றை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டியதில்லை.
“முழுமையான மறு ஆய்வில் ( இனிமேலும் பொருத்தமில்லாத சட்டங்கள்) 1933ம் ஆண்டுக்கான வசிப்பிடக் கட்டுப்பாட்டு சட்டமும் 1984ம் ஆண்டுக்கான அச்சுக்கூட, வெளியீட்டுச் சட்டமும் இடம் பெறும்.
அவற்றுக்கான ஆண்டு அனுமதிகள் ரத்துச் செய்யப்பட்டு வழங்கப்படும் அனுமதி, அது ரத்துச் செய்யப்படும் வரையில் நடப்பில் இருக்கும் வகையில் மாற்றப்படும்”, என்றார் பிரதமர்.
1967ம் ஆண்டுக்கான போலீஸ் சட்டத்தின் 27வது பிரிவையும் அரசாங்கம் மறு ஆய்வு செய்யும். அந்த ஆய்வில் ஒன்று கூடுவதற்குக் கூட்டரசு அரசியலமைப்பின் 10வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் அது சாலை ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான கோட்பாட்டைக் கொண்டிருக்கும்”, என்றார் நஜிப்.
என்றாலும் அனைத்துலக நடைமுறைகளுக்கு ஏற்ப பின்னர் முடிவு செய்யப்படும் வழிமுறைகளுக்கு இணங்க ஒன்று கூடுவதற்கான அனுமதிகள் கொடுக்கப்படும்.