அகதிகளாக இருப்பவர்கள் வேலை தேடவும் வேலை செய்யவும் இடமளிக்கும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வழக்குரைஞர் மன்றம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
உலக அகதிகள் தினத்தையொட்டி வெளியிட்டிருக்கும் செய்தியொன்றில் மலேசிய வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ, அகதிகள் வேலை செய்ய முன்பே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் ஆனால், அது முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை அல்லது சட்டமாக உருப்பெறவில்லை என்றார்.
அடைக்கலம் தேடி வருவோர் பணமின்றியும் உடைமைகளின்றியும் வருவதால் குறைந்த சம்பளத்தில் கிடைக்கும் வேலைகளைச் செய்யும் கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள் என்று லிம்(இடம்)விளக்கினார்.
மலேசியா அதே நாடுகளிலிருந்து வந்தவர்களை வேலைக்கு அமர்த்திக்கொண்டிருப்பதால் அவர்களுக்குச் சட்டப்பூர்வமாக வேலை கொடுப்பதில் பிரச்னைகள் எதுவுமிருக்காது.
“சொல்லப்போனால், அது வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான தேவையைக் குறைத்து அகதிகளின் வாழ்க்கைநிலையை மேம்படுத்தும்”,என்று லிம் கூறினார்.
அரசாங்கம், ஐநாவின் அகதிகள் தொடர்பான ஒப்பந்தங்களில் எப்போது கையொப்பமிடப்படும் என்பதையும் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் லிம் கேட்டுக்கொண்டார்.
அந்த ஒப்பந்தங்கள் அகதிகளின் தகுதிகளையும் உரிமைகளையும் வரையறுப்பதுடன் அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதையும் தடுக்கின்றன.
“பன்னாட்டுச் சமூகத்தில் பொறுப்புள்ள ஒரு நாடு என்பதுடன் ஐநா மனித உரிமை மன்றத்தின் உறுப்புநாடு என்ற முறையிலும் அரசாங்கம் அதன் அனைத்துலகக் கடப்பாடுகளை நிறைவேற்றிட வேண்டும்”, என லிம் கேட்டுக்கொண்டார்.
ஏப்ரல் முடிய, ஐநா அகதிகள் உயர் ஆணையர் அலுவலகத்தில் 98,100பேர் தங்களை அகதிகளாக பதிவு செய்துகொண்டிருப்பதாகவும் அவர்களில் 20,000பேர் சிறுவர்கள் என்றும் லிம் குறிப்பிட்டார்.