அப்துல்லாவின் கப்பாளா பத்தாஸ் தொகுதிமீது இருவர் குறி வைத்துள்ளனர்

முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் படாவி கப்பாளா பத்தாஸ் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பத்தைக் கொண்டிருக்க மாட்டார் என்கிறார் பினாங்கு மாற்றரசுக் கட்சித் தலைவர் அஸ்ஹார் இப்ராகிம்.

அதனால், அந்தத் தொகுதிமீது இருவர் கண் வைத்திருக்கிறார்கள் என்று மாநில அம்னோ தொடர்புச் செயலாளருமான அஸ்ஹார் கூறினார்.ஒருவர் அம்னோ இளைஞர் தகவல் பிரிவுத் தலைவர் ரீசல் மரைக்கான் நைனா மரைக்கான் இன்னொருவர் முன்னாள் பெர்தாம் சட்டமன்ற உறுப்பினர் ஹில்மி அப்துல் ரஷிட்.

“அவர்கள்தான் அங்கு களமிறக்கப்படுவார்கள் என்று சொல்லவில்லை.இருவரும் அங்கு போட்டியிட ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மேலிடம்தாம் முடிவு செய்ய வேண்டும்”.பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை மனத்தில் வைத்து அவ்வாறு குறிப்பிட்டார்.

அஸ்ஹார், பெனாகா சட்டமன்ற உறுப்பினர்.1997-இலிருந்து அத்தொகுதியை வைத்திருக்கும் அவர், 22ஆண்டு அரசியல் போதும் என்று நினைக்கிறார்.எனவே, எதிர்வரும் தேர்தலில் அவர் போட்டியிடப்போவதில்லை.

தம் தொகுதியில் போட்டியிட “வெற்றிபெறும்” தகுதிகளைக் கொண்ட நான்கு இளைஞர்கள் தயாராக இருப்பதாய் அவர் சொன்னார்.

வெற்றிபெறும் வேட்பாளர்கள் பற்றி விளக்கிய அஸ்ஹார், அவர்கள் தக்க தகுதிகளைக் கொண்டிருப்பதுடன் அடிநிலை உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளத் தக்கவர்களாகவும் இருத்தல் வேண்டும் என்றார்.

“உயர்தகுதிகள் இருக்கலாம்.ஆனால், மக்களுடன் நெருக்கம் இல்லையென்றால் அவர் வெற்றிபெறும் வேட்பாளராக மாட்டார்.மருத்துவரோ, பொறியியலாளரோ களமிறங்கி வேலை செய்பவராக இருத்தல் வேண்டும்”.

66 வயதாகும் அஸ்ஹார், குடும்பத்தினர், நண்பர்களின் ஆலோசனையின்பேரில் அரசியலைவிட்டு ஒதுங்கி அமைதியான குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதென்ற முடிவுக்கு வந்துள்ளார்.

வயதான நிலையிலும் அரசியலைக் கலக்கும் முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட் போன்றோர், “சிறப்புத்தன்மை வாய்ந்தவர்கள்” என்றவர் வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.

பினாங்கில் மாற்றரசுக் கட்சித் தலைவர் என்ற முறையில் சிறப்பாக பணியாற்றியுள்ளாரா என்று வினவியதற்கு, தாம் மக்கள் பிரச்னைகள் பலவற்றை எடுத்துரைத்திருப்பதாக அஸ்ஹார் கூறினார்.ஆனால், முதலமைச்சர் லிம் குவான் எங் தலைமையில் செயல்படும் மாநில அரசு பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதில்லை என்றார்.

ஒரு முக்கியமான விவகாரத்தை எழுப்பும்போதெல்லாம் ஏதாவது காரணத்தைச் சொல்லி சட்டமன்றத்தைவிட்டு வெளியில் தூக்கிப் போட்டு விடுவார்கள் என்றாரவர்.

ஏற்கனவே இரண்டு முறை இடைநீக்கம் செய்யப்பட்டவர் அஸ்ஹார்.இப்போது சட்டமன்ற குறிப்புகள் நம்பத்தக்கவைதானா என்று கேள்வி எழுப்பியதற்காக மீண்டும் உரிமைகள் மற்றும் சலுகைகள் குழுவின் விசாரணையை எதிர்நோக்கியுள்ளார்.

ஆனால், அது மனித உரிமைகளை மதிக்காத ஒரு குழு என்று குறிப்பிட்ட அஸ்ஹார் அதன் விசாரணைக்கு உடன்பட மறுத்துவிட்டார்.