நிதி நிறுவனங்களின் நேர்மையும் கௌரவமும் பணயம் வைக்கப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறுகிறார்.
NPL எனப்படும் செயலிழந்த (வராத) கடன்களை அந்நிய நிறுவனங்களுக்கு விற்றதின் மூலம் உள்நாட்டு வங்கிகள், வங்கி, நிதி நிறுவனச் சட்டத்தை மீறியுள்ளன என்று அவர் அபாயச சங்கை ஊதியுள்ளார்.
49 விழுக்காட்டுக்கும் குறைவான உள்நாட்டு மூலதனத்தைக் கொண்ட நிதி நிறுவனங்கள் அந்த செயலிழந்த (வராத) கடன்களை வாங்கியுள்ளதற்கான ஆதாரங்களை மலாய் மெயில் நாளேடு வெளியிட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
அந்த விற்பனை வங்கி, நிதி நிறுவனச் சட்டத்தை மீறுவதாகும் என புவா சொன்னார்.
ஒரு விவகாரத்தில் பெயர் அறிவிக்கப்படாத பிரபலமான உள்நாட்டு வங்கித் தலைவருடைய மருமகனான அந்நியர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அந்த நாளேடு குறிப்பிட்டுள்ளது.
அந்த நடவடிக்கையில் அந்நியர்கள் பெரும்பான்மை பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு அந்த செயலிழந்த (வராத) கடன்கள் விற்கப்பட்டுள்ளன.
2005ம் ஆண்டு தொடக்கம் நிகழ்ந்து வரும் அந்த ரகசியமான நடவடிக்கையின் விளைவாக 60 பில்லியன் ரிங்கிட் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக மலாய் மெயில் செய்தில் கூறப்பட்டுள்ளது.
“அந்த விஷயங்களில் சுய நலன், நம்பிக்கை மோசடி, ஏன் மோசடி கூட சம்பந்தப்பட்டுள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புலனாய்வு செய்ய வேண்டும்,” என புவா கேட்டுக் கொண்டார்.
மலாய் மெயில் செய்தியை மறுத்துள்ள பாங்க் நெகாராவைக் குறை கூறிய அந்த எம்பி, சட்டம் மீறப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் காட்டப்பட்டுள்ள போதிலும் அந்த மத்திய வங்கியின் மறுப்பு “சரியானது அல்ல, தவறாக வழி நடத்துகிறது” எனத் தெரிவித்தார்.