பிரதமர் அவர்கள் 180 மில்லியன் ரிங்கிட் கடனை இந்திய சமுதாயத்துக்கு வழங்க முன்வந்துள்ளது மற்றோரு வாக்கு வாங்கும் யுக்தி போலும்!
இந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்திருந்தாலும் மலாய் அல்லாத பிற இன குடிமக்களுக்கு பிரத்தியேக சலுகை ஏதும் இல்லை என்பதை அனைவரும் அறிவர். குறிப்பாக அரசாங்க மற்றும் அரசாங்கத் தொடர்புடைய நிறுவனங்கள் அளிக்கும் வாய்ப்புகளிலிருந்து அவர்கள் ஒதுக்கிவைக்கப்படுகின்றனர்.
மலாய் அல்லாத இனத்தார் வணிகம் செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் உள்ளன. உதாரணத்துக்கு ஒரு ரொட்டித் தயாரிப்பாளர் ஹலால் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். ஹலால் சான்றிதழ் விண்ணப்பம் செய்வதற்கு அவர் பூமிபுத்ரா பங்காளியைக் கொண்டிருக்க வேண்டும். அதுமட்டும் அல்ல, நிர்வாகி தரத்தில் மலாய் ஊழியர்கள் இருக்க வேண்டும்.
ஹலால் சான்றிதழின் பெயரில் மலாய்க்காரர் சந்தைகளில் பிற இனத்தார் வியாபாரம் செய்ய முடியமல் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
அதே வேளை ஊராட்சி மன்றம் மலாய் வியாபாரிகளுக்கு அனுமதி (பர்மிட்) வழங்குவதில் தாராள போக்கினைக் கொண்டிருக்கிறது. ஆனால் பிற இனத்தார் மலாய்க்காரர்கள் அதிகம் இல்லாத பகுதிகளில் வியாபாரம் செய்வதற்குக் கூட பல வரையறைகள் மற்றும் லாபத்தில் பங்களிக்கும் கட்டாயத்தை விதிக்கின்றது.
நிலைமை இவ்வாறு இருக்க பாரிசான் அரசாங்கம் இந்தியர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக ம.இ.காவும் அம்னோவும் மார்தட்டிக் கொள்கின்றன.
2006ம் ஆண்டு வாக்கில் எனது உறவினர் ஒருவர் மியன்மாரில் இருந்து ஆடுகளை தருவிக்க விரும்பினார். அனுமதிக்காக சுங்க மற்றும் விவசாயத் துறைகளை நாடிய போது, ஒரு பூமிபுத்ரா பெயரில் மட்டுமே ஆடுகளை இறக்குமதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது. அதன் பின், ஒரு நம்பகரமன பூமிபுத்ரா பங்காளியத் தேடி அல்லது குறைந்தபட்சம் ஒரு பூமிபுத்ரா பெயரை இரவல் வாங்க அவர் அலைய வேண்டியதாயிற்று. இறுதியில் ஆடு வளர்ப்புத் தொழிலில் இருக்கும் ஒரு அன்பரின் மூலம் ஆடுகளை தருவித்து விற்பனை செய்தார் உறவினர். ஆனால் அந்த ஓர் உதவிக்குப் பின் அந்தப் பூமிபுத்ரா பங்காளிதாரர் நேரடியாக மியன்மார் சென்று சொந்தமாக ஆடுகளை தருவிக்க ஆரம்பித்துவிட்டார். அத்துடன் ஆடு விற்பனை தொழிலை உறவினர் இழந்தார்.
இவ்வாறுதான் இந்திய சிறு வியாபரிகள் பற்பல இடர்பாடுகளில் சிக்கி, நஷ்டத்தில் வீழ்ந்து மிகுந்த துன்பத்துக்கு உள்ளாகின்றனர்! மன உளைச்சலுக்கு
இலக்கான எனது உறவினர் 2007ம் ஆண்டு நடைபெற்ற ஹின்ராப் பேரணிக்கு தனது நண்பர் குழாமை அழைத்து வந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய கட்டுப்பாடுகள் சிரமங்களுக்கு இடையேதான் நமது இந்திய சமூகம் வியாபாரத் துறையில் ஈடுபட வேண்டியுள்ளது. உலகில் வேறெந்த நட்டிலும் சொந்த குடிமக்கள் வியாபரம் செய்வதற்கு இத்தகைய சூழ்ச்சிகளுக்கும் கெடுபிடிகளுக்கும் இலக்காவது இல்லை.
பிரதமர் அவர்கள் ஒரே மலேசியா பிரச்சாரம் செய்தாலும், அம்னோ தனது கொள்கைகளில் இனப் பாகுபாடு கொண்ட வேடதாரியாக உள்ளது.
அம்னோவின் இந்த மாற்றாந்தாய் போக்கு குறித்து அறிந்திருந்தும் ம.இ.கா.வும் பி.பி.பியும் சுயநலப் போர்வையில் பாராமுகமாக இருக்கின்றன.
பிரதமர் அவர்களே! போதும் தேர்தல் இனிப்புகளும் அன்பளிப்புகளும்! நகர்ப்புற இந்தியர்கள் விழித்துக் கொண்டுவிட்டனர். கிராமப்புற இந்தியர்கள் விழித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். உண்மை நிலை அறிய விவகாரத்தை உள்நோகுங்கள்.
அரசாங்க வட்டத்திலும் அரசாங்க சார்பு நிறுவனங்களிலும் இந்தியர்களுக்கு உரிய வாய்ப்புக்கள் அளிக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் அரசுக்குத் தேவையானவற்றை அளிப்பானை செய்வதற்கு உரிமையும், குத்தக்கைகள் பெறும் வாய்ப்பும், (அரசாங்கத்தில் வேலை வாய்ப்பும் உயர் பதவிகளும்) திறந்த மனத்தோடு கொடுங்கள்.
நாங்கள் கையேந்தவில்லை! அரசு நியாயமாக செயற்பட வேண்டும். இந்தியர்களின் வளர்ச்சிக்கு இனம் அல்லது சமயம் தடையாக இருக்கக் கூடாது. அரபியர்கள் கூட வெளிப்படையான போக்கைக் கொண்டுள்ளனர். நம்மைக் கட்டுப்படுத்துவதற்கு அவர்கள் ஹலால் விசயத்தை கையாளவில்லை.
பிரதமர் அவர்கள் குறைந்தபட்சம் உடனடியாக செய்ய வேண்டியது 180 மில்லியன் ரிங்கிட் கடனுதவியை மானியாமாக் மற்றுவதுதான்.
—————————————————————————————————————————————————
செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன்.