‘PKR’ கார் எண் தகடுகளுக்கு அவ்வளவாக ஆதரவு இல்லை

எதிர்க்கட்சியான Parti Keadilan Rakyatன் சுருக்கமான சொல்லான ‘PKR’  கார் எண் தகடுகள் பிகேஆர் தலைவர்கள், பொது மக்கள் ஆகியோரிடமிருந்து அவ்வளவாக ஆதரவைப் பெறவில்லை.

‘PKR1’ என்ற எண்ணை பினாங்கு வணிகரான ஒங் தாய் யாங், 99,555 ரிங்கிட்டுக்கு – PKR எண்ணுக்கு அதிகமான ஏல விலை- எடுத்துள்ளார்.

அந்த நிலை ‘MCA 1’, ‘WWW 1’ ஆகியவற்றுக்குக் கொடுக்கப்பட்ட முறையே 300,100 ரிங்கிட் 520,000 ரிங்கிட் விலைகளுடன் ஒப்பிடுகையில்  நேர்மாறானதாகும்.

நெகிரி செம்பிலான் பிகேஆர் தலைவரும் தெலுக் கெமாங் எம்பி-யுமான கமருல் பாஸ்ரெய்ன் அபாஸ் ‘PKR 16’ என்ற எண்ணை மூவாயிரம் ரிங்கிட்டுக்கு எடுத்துள்ளார். தானா மேரா எம்பி அம்ரான் அப்துல் கனி ‘PKR 161’ எண்ணை 600 ரிங்கிட்டுக்கு வாங்கியுள்ளார். அதே வேளையில் ‘PKR401’ , 400 ரிங்கிட்டுக்கு குச்சில் சட்டமன்ற உறுப்பினர் துவான் ஸாம்ரி அரீப் துவான் ஸாக்காரியாவுக்கு சென்றது.

பினாங்கு பிகேஆர் தலைவரும் பினாங்கு துணை முதலமைச்சருமான மான்சோர் ஒஸ்மான் மூன்று எண்களுக்கு ஏலம் கோரியதாகவும் ஆனால் எதிலும் வெற்றி பெறவில்லை என்றும் கூறப்பட்டது.

‘PKR எண்களுக்கு மொத்தம் 623 கோரிக்கைகள் மட்டுமே வந்ததாக பினாங்கு சாலைப் போக்குவரத்துத் துறை இயக்குநர் ஹசான் யாக்கோப் கூறினார். அதில் 384 மட்டுமே வெற்றி பெற்றன.

‘WWW’ எண்களுக்கு மொத்தம் 18,243 கோரிக்கைகள் வந்தன என்றும் அவர் சொன்னார்.

‘PKR 8’, ‘PKR 3’, ‘PKR 5′,’PKR 2’ ஆகிய எண்கள் அதிக விலையில் ஏலத்தில் எடுக்கப்பட்டதாகவும் ஹசான் சொன்னார்.