‘பாக்காவின் ஆதரவுக் கடிதம் அம்பலமாகிறது தகராறு முற்றுகிறது

சிலாங்கூர் மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் பாக்கா ஹுசினுக்கும் சட்ட நிறுவனம் ஒன்றுக்கும் சிலாங்கூர் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றுக்கும் இடையில் கடிதத் தொடர்புகள் சிலாங்கூர் பிகேஆர்-ல் உருவாகியுள்ள தகராற்றில் பாக்கா எதிர்ப்பு குழுவிற்குப் புதிய தீவனமாகியுள்ளது.

பிகேஆர்-ரையும் சிலாங்கூர் அரசாங்கத்தையும் கடுமையாகக் குறை கூறி வரும் Sel13.com என்ற வலைப்பதிவில் நேற்று இரண்டு கடிதங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்தக் கடிதங்கள் அரசியல் செயலாளருக்கு பாதகமான தோற்றத்தைத் தந்து விடக் கூடும் என கருதப்படுகின்றது.

சிலாங்கூர் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனம் (ஜிஎல்சி) ஒன்றுக்கு தமது உறவினர்  ஒருவருக்குச் சொந்தமான சட்ட நிறுவனம் ஒன்றை ஜிஎல்சி-யின் வழக்குரைஞர் குழுவில் இணைத்துக் கொள்ளுமாறு 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 தேதியில் பாக்கா பரிந்துரை செய்யும் கடிதமும் அவற்றுள் அடங்கும். சிலாங்கூர் மந்திரி புசார் அலுவலகத் தாளில் அந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

“நிறுவன விதிகளை மீறாத வரையில் அந்தச் சட்ட நிறுவனத்துக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும் என நிர்வாகம் கருதுகிறது,” என பாக்கா அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதத்தின் பிரதி சம்பந்தப்பட்ட சட்ட நிறுவனத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

கருத்துக்களைப் பெறும் பொருட்டு அந்தச் சட்ட நிறுவனம். அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனம் ஆகியவற்றின் பெயர்களை மலேசியாகினி வெளியிடவில்லை.

2011ம் ஆண்டு ஜுன் 27ம் தேதி சட்ட நிறுவனத்துக்கும் பாக்காவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட கடிதத் தொடர்புக்கு பின்னர் அவருடைய பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சிலாங்கூர் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் சட்ட ஆலோசனைக் குழுவிற்கு நியமிக்கப்படுவது மீது பாக்காவின் பரிசீலினையை அந்தச் சட்ட நிறுவனம் தனது கடிதத்தில் கோரியுள்ளது.

“நீங்கள் எங்கள் விண்ணப்பத்தை பரிசீலிப்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம். எங்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டால் நாங்கள் சிறந்த சேவையை வழங்குவோம். உங்களுக்கு ஏமாற்றத்தைத் தர மாட்டோம்,” என சட்ட நிறுவனத்தின் பங்காளி ஒருவர் எழுதியுள்ளார்.

தனிப்பட்டது ரகசியமானது என குறிக்கப்பட்ட அந்தக் கடிதம் நேரடியாக சிலாங்கூர் மந்திரி புசார் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.