உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் (இசா) கீழ் கமுந்திங்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈராக்கியக் கைதி ஒருவர் அங்கு தமக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவத்தையும் துயரத்தையும் வழக்குரைஞர்களிடம் இன்று விவரித்துள்ளார்.
குவாண்டானாமோ பாணியிலான ‘சித்தரவதையை’ தாங்கிக் கொள்ள முடியாமல் தாம் இரண்டு முறைக்கு மேல் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக ஸாமி ஹம்மாட் என்ற அந்தக் கைதி கூறியதாக விடுதலைக்கான வழக்குரைஞர் அமைப்பின் பேச்சாளர் பாடியா நாட்வா பிக்ரி கூறினார்.
ஸாம் ஹம்மாட் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஹம்மாட் கைது செய்யப்பட்ட பின்னர் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் 60 நாட்களுக்கு வைக்கப்பட்டிருந்தார். அதற்குப் பின்னர் அவர் பேராக்கில் உள்ள கமுந்திங் இசா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அடைக்கலம் நாடும் ஈராக்கியர்களை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்ல அவர் முயன்றார் என அவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலத்தை பெறத் தவறிய பின்னர் போலீஸ் புலனாய்வாளர்கள் தம்மை 72 மணி நேரத்துக்கு தூங்க விடாமல் செய்ததாக அவர் சொன்னார்.
“வர்த்தகம் தொடர்பான” பயணம் மேற்கொண்டு கோலாலம்பூருக்கு வந்து சேர்ந்த பல நாட்களுக்குப் பின்னர் மனிதக் கடத்தக் குற்றச்சாட்டுக்களின் பேரில் ஹம்மாட் கைது செய்யப்பட்டார்.