பேரணியில் மலேசியர்கள் மட்டுமே பங்கு கொண்டதாக சிங்கப்பூர் பெர்சே கூறுகிறது

மலேசியாவில் நிகழவிருக்கும் பொதுத் தேர்தலில் தலையிடும் பொருட்டு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் பயிற்சி ஒன்றில் சிங்கப்பூரர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை என அதன் ஏற்பாட்டாளரான சிங்கப்பூர் பெர்சே ஒர் அறிக்கையில் கூறியுள்ளது.

“அது, மலேசியர்களுக்காக மலேசியர்கள் ஏற்பாடு செய்த மலேசிய நிகழ்வு என சிங்கப்பூர் பெர்சே வலியுறுத்த விரும்புகிறது.”

“அந்த நிகழ்வில் பங்கு கொண்டவர்கள் சிங்கப்பூரில் வாழும் மலேசியர்களாக இருந்ததால் அது சிங்கப்பூரில் நடத்தப்பட்டது,” என அந்தக் குடியரசில் தேர்தல் சீர்திருத்தப் போராட்ட அமைப்பின் முயற்சிகளை ஒருங்கிணைக்கும் ஒங் குவான் சின் கூறினார்.

அரசாங்க ஆதரவு வலைப்பதிவான MyMassaசிங்கப்பூர் அரசதந்திரிகள் பெர்சே 3.0 பேரணியில் பங்கு கொண்டதின் மூலம் மலேசியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக ஜுன் 15ம் தேதி முதல் தொடர்ச்சியாக பல பதிவுகள் வழி குற்றம் சாட்டி வருகின்றது. அந்த அரசதந்திரிகளில் ஒருவர் மஞ்சள் நிற டி சட்டையை அணிந்திருந்ததாகக் கூட அந்த வலைப்பதிவுகள் கூறிக் கொண்டன.

தேர்தலின் போதும் வாக்குகள் எண்ணப்படும் போதும் முகவர்களாக செயல்படுவதற்கு சிங்கப்பூர் பெர்சே மலேசியர்களுக்கு நடத்தியதாக கூறப்படும் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட 31 படங்களும் அந்த வலைப்பதிவுகளில் வெளியிடப்பட்டுள்ளன.

“13வது பொதுத் தேர்தலில் டிஏபி-க்கு உதவும் பொருட்டு மற்ற மக்கள் செயல் கட்சியின் (பிஏபி) தொண்டர்களுக்கு பிஏபி தொண்டர் ஒருவர் பயிற்சி அளிப்பதைப் பாருங்கள்.” என அந்த அடையாளம் தெரியாத வலைப்பதிவாளர் எழுதியுள்ளார்.

மலாய் நாளேடான உத்துசான் மலேசியாவின் கட்டுரையாளர் ஜைனி ஹசான் ஜுன் 30ம் தேதி அந்த வலைப்பதிவைக் கருவாக எடுத்துக் கொண்டு எழுதிய கட்டுரையில் ‘அது உண்மை என்றால் அதிர்ச்சி அளிப்பதாக” கூறினார்.

ஜைனியின் கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து பல அரசு சாரா அமைப்புக்கள் அவருடன் தொடர்பு கொண்டு வெள்ளிக் கிழமை தொழுகைக்குப் பின்னர் சிங்கப்பூர் தூதரகத்துக்கு வெளியில் ஆட்சேபக் கூட்டத்தை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்ததாகவும் அந்த வலைப்பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.

என்றாலும் கோலாலம்பூரில் உள்ள அந்தத் தூதரகத்தின் தற்காலிக அலுவலகத்துடன் தொடர்பு கொண்ட போது அத்தகைய ஆர்ப்பாட்டத்துக்கான அறிகுறிகள் ஏதுமில்லை என்பது தெரிய வந்தது.

அதற்குப் பதில் பிற்பகல் மணி 2.30 வரையில் தூதரகக் கட்டிடத்துக்கு வெளியில் கலகத் தடுப்புப் போலீசார் உட்பட 20க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் காவல் புரிந்தனர்.

தேர்தல் சீர்திருத்த ஆதரவுப் பேரணியின் போது மூன்று அரசதந்திரிகள் தனிப்பட்ட முறையில் இருந்ததாகவும் அவர்களில் யாரும் பெர்சே டி சட்டைகளை அணிந்திருக்கவில்லை என்றும்  சிங்கப்பூர் தூதர் ஒங் கே யோங் கூறியதாக தி ஸ்டார் நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.