காலித்தை தாம் முதுகில் குத்தவில்லை என்கிறார் அஸ்மின்

 பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, தமக்கும் சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிமுக்கும் இடையில் தகராறு நிலவுவதாக கூறப்படுவதை மறுத்துள்ளார். அந்த வதந்திகளை ‘அவதூறுகள்’ என அவர் வருணித்தார்.

காலித் தலைவர் என்ற ரீதியில் நல்ல முறையில் செயல்பட்டு வருவதால் தாம் அவரை தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளதாக அவர் சொன்னார்.

அஸ்மின் நேற்று கிளந்தானில் தேர்தல் எந்திரத்தை முடுக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

“பூசல் நிலவுவதாக சிலர் சொல்கின்றனர். அது அவதூறானது. உண்மையில் மத்திய நிலையிலோ அல்லது மாநில நிலையிலோ வேறுபாடு ஏதுமில்லை. அஸ்மின் அலி மன்றம் என ஒன்று இருப்பதாகக் கூட எனக்குத் தெரியாது,” என அவர் சொன்னதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

காலித்-தின் அரசியல் செயலாளரான பாக்கா ஹுசினை வீழ்த்துவதற்கு அஸ்மின் அலி ஆதரவு மன்ற ஆதரவுடன் Kami Sayangkan PKR (நாங்கள் பிகேஆரை நேசிக்கிறோம்) என்னும் அமைப்பு முயலுவதாக கடந்த வாரம் மலேசியாகினி செய்தி வெளியிட்டது.

கடந்த மூன்று வாரங்களாக அந்த அமைப்பு Twitter account @PecatFaekah (பாக்காவை நீக்குங்கள்) வழி அந்த அரசியல் செயலாளரைத் தாக்கி வருகின்றது.

மந்திரிபுசார் ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனம் (Menteri Besar Incorporated) நிர்வாகம் செய்யும் Geran Selangorku -வின் கீழ் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதிகள் விநியோகம் செய்யப்படும் முறை குறித்து அந்த அமைப்பு அதிருப்தி அடைந்துள்ளது.

அந்த நிதிகள் சொத்து மேம்பாட்டாளரான Talam Corporation Bhd -டிடமிருந்து பெறப்பட்ட கடன்களிலிருந்து திரட்டப்பட்டதாகும்.

தொடக்கத்தில் அந்த இயக்கம் சிறியதாகத் தோன்றினாலும் அந்த நிதிகள் பாக்காவின் கட்டுக்குள் இருப்பதால் அவர் நீக்கப்பட வேண்டும் என அஸ்மின் டிவிட்டரில் கூறிய பின்னர் சர்ச்சை பெரிதானது.

அடுத்து அந்த டிவிட்டர் ‘ஒரு விபத்து’ எனக் குறிப்பிட்ட அஸ்மின், பல மாதங்களாகவே பாக்காவுக்கு எதிராக புகார்கள் கூறப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அந்த இயக்கத்தை ‘திறமையான’ தமது அரசியல் செயலாளருக்கு எதிராக ‘அதிருப்தி அடைந்த சிலர்’ மேற்கொண்டு வருவதாக காலித் கூறியுள்ளார்.

அது முழுமையாக மந்திரி புசார் அலுவலகத்தைக் குறியாக கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கருதுகிறார்.

 

TAGS: