குவாந்தானில் 24 மணி நேர பாலோக்- கெபெங் ஆக்கிரமிப்பு பேரணியை இன்று 300க்கும் மேற்பட்ட லினாஸ் எதிர்ப்பு போராளிகள் தொடக்கி வைத்தனர். பாலோக் கடற்கைரையில் தோரணங்களை முதலில் ஒரு குழு நடத் தொடங்கியது.
பிற்பகலில் காற்று வேகமாக வீசிய போது 50 பேர் லினாஸ் எதிர்ப்பு சுலோகங்களைக் கொண்ட அந்த ஒரே கம்பத் தோரணங்களை கடலோர மணலில் நட்டனர்.
அந்தக் கடற்கரை சர்ச்சைக்குரிய அரிய மண் தொழில் கூடம் அமைந்துள்ள கெபெங் தொழில் பேட்டைக்கு அருகில் உள்ளது. அந்தத் தொழில் கூடம் விரைவில் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹிம்புனான் ஹிஜாவ் தலைவர் வோங் தாக் வழி நடத்த பச்சை நிற ஆடை அணிந்திருந்த கூட்டத்தினர் ‘லினாஸை நிறுத்துங்கள், லினாஸ் வெளியேறு’ என்ற வாசகங்களைத் திரும்பத் திரும்ப முழங்கினர்.
அதற்கு பின்னர் கடலோரத்தில் தோரணங்கள் நடப்பட்டன.
துக்கத்திற்கான பாரம்பரிய கறுப்பு நிற வர்ணத்திலான அந்தத் தோரணங்களில் வாசகங்கள் வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டிருந்தன. அவற்றுள் : “13வது பொதுத் தேர்தல், நாம் பிஎன்-னை புதைப்போம், லினாஸைப் புதையுங்கள், மலேசிய மண்ணில் லினாஸ் வேண்டாம்” என்ற வாசகங்களும் அடங்கும்.
அந்த நிகழ்வைத் தொடக்கி வைத்த சுற்றுச்சூழல் போராளியும் உபசரணையாளருமான ஹிஷாமுடின் ராயிஸ்,” லினாஸ் எதிர்ப்புப் போராட்டத்துக்கு மலேசிய மக்கள் உறுதியான வலிமையான ஆதரவை வழங்குவதை இது குறிக்கிறது,” என்றார்.