Opps 2020 கூட்டக் குறிப்புக்கள் உண்மையானவை என மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்

மாணவர் தேர்தல்களில் தில்லுமுல்லு செய்வதற்கு அம்னோ தலைவர்களும் அரசாங்க நிறுவனங்களும் போலீசாரும் சதித் திட்டத்தை வகுப்பதற்காக நடத்தப்பட்டது எனக் கூறப்படும் கூட்டக் குறிப்புக்கள் உண்மையானவை என பிஎம்என் என்ற Pro-Mahasiswa Nasional அமைப்பு நம்புகின்றது.

அதற்கான ஆவணம் தங்களிடம் இருப்பதாக பிஎம்என் பேச்சாளர் எடிக்குப் லாக்கிப் செடியாந்தோ கூறினார்

சதித் திட்டம் தீட்டப்பட்டது என்பதற்கு தங்களிடம் உள்ள பல ஆதாரங்களில் அதுவும் ஒன்று என அவர் சொன்னார்.

“ஜனவரி 25ம் தேதியிடப்பட்ட அந்தக் கூட்டக் குறிப்புக்கள் மாணவர் பேராளர் மன்றம் வெளியிட்டுள்ளது. அவற்றில் செயலாளர் கையெழுத்திட்டுள்ளார்.”

என்றாலும் இரண்டு வாரங்களுக்கு முன்பு நிகழ்ந்த அந்த விவகாரம் மீதான கூட்டக் குறிப்புக்களின் இன்னொரு பிரதி உட்பட மற்ற ஆவணங்களை வெளியிடுவதற்குத் தாங்கள் தயாராகும் வரையில் செயலாளரது பெயரை ரகசியமாக வைத்திருக்க பிஎம்என் முடிவு செய்துள்ளதாகவும்  எடிக்குப் சொன்னார்.

“அண்மைய எதிர்காலத்தில் நாங்கள் நிருபர்களைச் சந்தித்து அதிகமான விஷயங்களை  அம்பலப்படுத்துவோம்.”

அதில் சம்பந்தப்பட்டவர்கள் Opps 2020 என எதுவுமில்லை என்றும் குறிப்புக்கள் போலியானவை என்றும் கூறியுள்ளனர்,” எனத் தொடர்பு கொள்ளப்பட்ட போது அவர் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் பல்கலைக்கழக அரசியலில் தலையிடுவதாக அரசாங்க எதிர்ப்பு மாணவர் அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.

பல்கலைக்கழக மாணவர் தேர்தல்களை தள்ளி வைப்பதும் மாணவர்கள் மீது பல்கலைக்கழக,  பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதும் Opps 2020 நோக்கம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்தக் குற்றச்சாட்டுக்கள் விசாரனையைத் தொடங்குமாறு அரசாங்கத்தின் மீது பிஎம்என் அழுத்தம் கொடுத்து வருகின்றது. அரசாங்கம் அவ்வாறு செய்யாவிட்டால் சம்பந்தப்பட்ட தலைவர்களை அம்பலப்படுத்தப் போவதாகவும் அது மருட்டியுள்ளது.