தொழிலாளர் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 2 மில்லியன் ரிங்கிட் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது

தீவகற்ப மலேசியாவில் தோட்டத் தொழிலாளர் குறைந்த விலை வீடமைப்புத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட்டில் இரண்டு மில்லியன் ரிங்கிட் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக மனித வள அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் இன்று தகவல் வெளியிட்டுள்ளார்.

பாங்க் சிம்பானான் நேசனல் கீழ் கடந்த ஆண்டு அமலாக்கப்பட்ட அந்தத் திட்டம், ஆண்டுக்கு நான்கு விழுக்காடு வட்டியுடன் 40 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்துவதற்கு 60,000 ரிங்கிட் வரையில் கடன் வழங்குவதற்கு வகை செய்கின்றது என அவர் சொன்னார்.

“சொந்த வீடு இல்லாத தோட்டத் தொழிலாளர்கள் ஒய்வு பெற்ற பின்னர் ஏற்படக் கூடிய பிரச்னைகளைச் சமாளிக்கும் பொருட்டு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் நோக்கத்தை அந்தத் திட்டம் கொண்டுள்ளது.

ஆகவே உங்களுக்கு பத்து ஆண்டுகள் வேலை செய்திருந்தால் காத்திருக்காமல் அந்தக் கடனுக்கு விண்ணப்பியுங்கள்,” என ஜோகூர் சிகாமாட்டில் அந்தத் திட்டத்தை தொடக்கி வைத்த போது சுப்ரமணியம் கேட்டுக் கொண்டார்.

ஜோகூரில் அந்தக் கடன்களைப் பெற்ற முதலாவது குழுவைச் சேர்ந்த ஒன்பது தொழிலாளர்களுக்கு வீட்டுச் சாவிகளை அவர் வழங்கினார்.

தோட்டத் தொழிலாளர்கள் ஒய்வு பெற்ற பின்னர் எதிர்நோக்கும் வீடமைப்புப் பிரச்னைகளை அரசாங்கம் அறியும் என்றும் நாடு முழுவதும் உள்ள 881,000 தோட்டத் தொழிலாளர்கள் அந்தத் திட்டம் தரும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் சுப்ரமணியம் குறிப்பிட்டார்.

பெர்னாமா